மகாளய அமாவாசை
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை நாளில், பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு நீர்நிலைகளின் கரையோரம் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அதன்படி மகாளய அமாவாசை தினமான நேற்று கோவையில் நீர்நிலைகளின் கரையோரம் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
இதையொட்டி பேரூரில் உள்ள நொய்யல் ஆற்றங்கரை படித்துறையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் அரிசி, பருப்பு, காய்கறி, எள் சாதம் ஆகியவற்றை படையல் வைத்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதன் மூலம் தோஷம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
ஏற்கனவே ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு ஆகிய நாட்களில் கொரோனா தொற்று குறைந்ததால், பேரூர் படித்துறையில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்த பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கி இருந்தது.
இதன் தொடர்ச்சியாக மகாளய அமாவாசைக்கும் அனுமதி இருந்ததால், நேற்று அதிகாலை முதலே பொதுமக்கள் வருகை அதிகரித்து இருந்தது. இதனால் பேரூர் படித்துறையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. தர்ப்பண வழிபாடுக்கு பிறகு பேரூர் பட்டீசுவரர் கோவிலுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து நெய் விளக்கு ஏற்றி, சாமி தரிசனம் செய்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
மகாளய அமாவாசை வழிபாட்டையொட்டி, பேரூர் படித்துறை, பட்டீசுவரர் கோவில் நுழைவாயில் மற்றும் பேரூர் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதற்கிடையில் வாகன போக்குவரத்து அதிகரித்ததால், பேரூர் பஸ் நிறுத்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.