முதல்-அமைச்சரிடம் பேசி தீர்வு காணப்படும்

0
87

தொழிலாளர்களை சந்தித்தார்

வால்பாறை அருகே உள்ள சிங்கோனா தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தில் (டேன்டீ) 500 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 50 வயதை கடந்த தொழிலாளர்களிடம் விருப்ப ஓய்வில் செல்ல விருப்பமா என்று வாய்மொழியாக அதிகாரிகள் கருத்து கேட்டனர். இந்தநிலையில் நேற்று வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி டேன்டீ தொழிலாளர்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அப்போது அவர்கள் பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கு, ஓய்வு பெறும் வயது வரை உள்ள பண பலன்களை முழுமையாக கொடுக்கவும், இதுதவிர ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் ரூ.20 லட்சம் வழங்கினால் நாங்கள் டேன்டீயை விட்டு செல்ல தயாராக இருப்பதாகவும், அரசு அறிவித்த சம்பளத்தை பெற்றுக்கொடுத்து, குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள், புதிய தொழிலாளர்களை பணியில் சேர்த்து டேன்டீ நிர்வாகத்தை சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போராட்டம் நடத்துவேன்

எங்களது வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ.விடம் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. பேசியதாவது:- நான் ஏற்கனவே இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசியுள்ளேன். டேன்டீயை மூடுவதாக வந்த அதிகாரப்பூர்வமில்லாத தகவல் குறித்து யாரும் பயப்பட வேண்டாம். இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக பேசி தீர்வு காணப்படும்.

தவறும் பட்சத்தில் உங்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவேன் என்றார். இதுகுறித்து டேன்டீ மண்டல மேலாளர் விக்ரமிடம் கேட்டறிந்தார். அதற்கு அவர் உயர்மட்ட அளவில் பேசியதை தொழிலாளர்களிடம் தெரிவித்தோம். அரசாணை எதுவும் வெளியிடப்படவில்லை என்று தெரிவித்தார். தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனே செய்து கொடுக்க வேண்டும் என்று அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார். அ.தி.மு.க. நகர செயலாளர் மயில் கணேசன், கவுன்சிலர் உமா மகேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.