ஆதார விலை கொப்பரை கொள்முதலுக்கு விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்

0
91

ஆதார விலை

நெகமம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் கொப்பரை கொள்முதல் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இருப்பினும் அரசின் ஆதார விலையில் கொப்பரை கொள்முதல் தொடர்ந்து நடக்கிறது. தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொப்பரையை கொண்டு வந்து ஆதார விலையான ஒரு கிலோ ரூ.105.90-க்கு விற்பனை செய்கின்றனர். தொடர்ந்து அடுத்த மாதம்(அக்டோபர்) 31-ந் தேதி வரை ஆதார விலையில் கொப்பரை கொள்முதல் செய்ய அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து அரசின் ஆதார விலையில் கொப்பரை கொள்முதலில் பயனடைய தவறிய விவசாயிகளை கருத்தில் கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நீட்டிப்பு

இதுகுறித்து நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் வாணி கூறியதாவது:- நெகமம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் அரசின் ஆதார விலையில் (ஒரு கிலோ ரூ.105.90) கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது. இது விவசாயிகள் பயன்பெறும் வகையில், அடுத்த மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதில் பயனடைய விருப்பம் உள்ள விவசாயிகள் தங்களது ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், சிட்டா நகல்கள் மற்றும் அசல் அடங்கலுடன் வந்து நெகமம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வருகிற 30-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.