விவசாயிகளுக்கு சிறு தானிய சாகுபடி பயிற்சி

0
67

பயிற்சி முகாம்

கிணத்துக்கடவு அருகே பொட்டையாண்டி புறம்பு கிராமத்தில், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் உணவு ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு பயற்சி முகாம் நடைபெற்றது. இதில் ஊட்டச்சத்து மிக்க சிறு தானியங்கள் சாகுபடி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். கிணத்துக்கடவு வட்டார வேளாண் உதவி இயக்குனர் ஆனந்தகுமார், வேளாண் உழவர் நலத்துறையின் திட்டங்கள் குறித்தும், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் புதுப்பிப்பது குறித்தும், ஆதார் எண்ணை இணைப்பது குறித்தும், மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்கள் குறித்தும் எடுத்துக்கூறினார்.

உயிரி உரங்கள்

வட்டார வேளாண்மை துணை அலுவலர் மோகனசுந்தரம், சிறுதானியங்களை பயிரிடும் முறைகள், பயிர்களுக்கு தேவையான நுண்ணூட்ட சத்துக்களின் பயன்பாடு, உயிரி உரங்களை பயன்படுத்தும் விதம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகள், சிறுதானியங்களை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்தல் குறித்து விளக்கமாக பேசினார். தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் துணை தோட்டக்கலை அலுவலர் பெருமாள் சாமி காய்கறி பயிர்களுக்கான திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறினார்.

மானிய திட்டங்கள்

வேளாண் பொறியியல் துறை சார்பில் உதவி பொறியாளர் ஜன பிரியா, வேளாண்மையில் எந்திரமயமாக்குதல், சிறுதானிய பயிர் சாகுபடியில் எவ்வாறு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது, பண்ணை குட்டைகள் அமைத்தல், வாய்க்கால்களை தூர்வாருதல், களை எடுக்கும் கருவி, தட்டு வெட்டும் கருவி, சூரியசக்தி மின்கல உலர்த்தி ஆகியவற்றுக்கான மானிய திட்டங்கள் குறித்து பேசினார். இதில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட பொட்டையாண்டி புறம்பு அலுவலர்(பொறுப்பு) சக்திவேல் மற்றும் ஆத்மா திட்ட உறுப்பினர்கள், கிராம விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.