ஒதுங்க நிழல் இல்லை… நோயாளிகள் அவதி…

0
87

அரசு ஆஸ்பத்திரி

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகள், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதனால் தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர். உள்நோயாளியாக 450 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் புதிதாக ரூ.10 கோடியே 50 லட்சம் செலவில் வெளிநோயாளிகள் பிரிவு, மகப்பேறு பிரிவு கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய பணிகள் மேற்கொள்வதில்லை. மருந்து, மாத்திரைகள் வாங்கும் இடத்தில் மேற்கூரை இல்லை. இதனால் நோயாளிகள் வெயிலில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

வயதானவர்கள் சிரமம்

இதன் காரணமாக வயதானவர்கள், பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரிடம் மேற்கூரை அமைத்து கொடுக்க வலியுறுத்தி புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நோயாளிகள், பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் சுப்பிரமணியம்:-

ஊழியர்கள் பற்றாக்குறை

அரசு ஆஸ்பத்திரி புதிய கட்டிடத்தில் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது. அங்கு ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக மருந்து வாங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருவதால், தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வருகின்றனர். இதனால் மருந்து வாங்கும் இடத்தில் கூட்டம் அலைமோதுகிறது.

மேலும் போதிய ஊழியர்கள் இல்லாததால் நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து மருந்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் மேற்கூரை இல்லாததால், வெயிலில் நிற்பதால் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, மருந்து வாங்கும் இடத்தில் மேற்கூரை அமைக்க வேண்டும். ஊழியர்கள் பற்றாக்குறையை போக்கி விரைவாக மருந்துகளை வழங்க வேண்டும்.

காத்திருப்பு அறை

குமரன் நகரை சேர்ந்த ரஞ்சிதா கூறியதாவது:-

அரசு ஆஸ்பத்திரியில் கட்டப்பட்டு உள்ள கட்டிடத்தில் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுக்கும் இடத்தில் மேற்கூரை இல்லை. இதனால் நோயாளிகள் வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. வெயிலில் நீண்ட நேரம் நிற்க முடியாமல் முண்டியடிப்பதால் சில நேரங்களில் தகராறு ஏற்பட்டு விடுகிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நிற்பதால், மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, மருந்து வாங்கும் இடத்தில் மேற்கூரை அமைக்க வேண்டும்.

பொள்ளாச்சி திருமலைசாமி:-

புதிதாக கட்டப்பட்டு உள்ள கட்டிடத்தில் நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் இல்லை. நோயாளிகளின் உறவினர்கள் கட்டிடத்திற்கு வெளியே நிழல் உள்ள பகுதியை தேடி அமர வேண்டி உள்ளது. மேலும் சாப்பிடுவதற்கு இடவசதி இல்லாததால், அங்கேயே தரையில் அமர்ந்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. ஆஸ்பத்திரியில் உள்ள நிதியை அத்தியாவசிய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். நோயாளிகளின் உறவினர்கள் அமருவதற்கு காத்திருப்பு அறை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.