சுற்றுலா பயணிகளை கவரும் தாவரவியல் பூங்கா

0
79

தாவரவியல் பூங்கா

மலைப்பிரதேசமான வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வந்து இயற்கை அழகை ரசித்து வருகின்றனர். இங்கு பசுமையான தேயிலை தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள் உள்ளிட்ட இயற்கை சூழலில் இதமான காலநிலை நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு வர ஆர்வம் காட்டி வருகின்றனர். கூழாங்கல் ஆறு, நல்லமுடி பூஞ்சோலை, சோலையாறு அணை, நீரார் அணை, 9-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ள ஆழியாறு அணை காட்சி முனை உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கின்றனர்.

இந்தநிலையில் வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் பி.ஏ.பி. காலனி பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.5 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்காக தாவரவியல் பூங்கா திறக்கப்பட்டது.

புலி, அணில்

பூங்காவில் அழகிய கற்களை கொண்ட நுழைவுவாயில், செயற்கை நீரூற்று, பல அரிய வகையான தாவரங்கள், மலர்களின் விவரங்கள் அடங்கிய கற்கள் பதிக்கப்பட்டு உள்ளது. குழந்தைகள் விளையாடி மகிழும் வகையில் சரக்கு, ஊஞ்சல் உள்பட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்கும் வகையில், இருக்கை மாடம் அமைக்கப்பட்டது.

கற்களில் செதுக்கிய புலி, அணில் வடிவங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. குழந்தைகளை கவரும் வகையில் வனவிலங்குகள் வடிவத்தில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. பூங்காவில் மரங்கள், பல வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளனர். மேலும் வால்பாறை பகுதி பொதுமக்கள் நகராட்சி தாவரவியல் பூங்காவில் தங்களது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு உள்ளது. வருகிற வார விடுமுறை நாட்களில் பூங்காவுக்கு சுற்றுலா பயணிள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.