பா.ஜ.க. அலுவலகம் உள்பட 2 இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு

0
87

பெட்ரோல் குண்டுவீச்சு

கோவை சித்தாபுதூரில் பா.ஜனதா கட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மீது நேற்று இரவு 8.35 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் திடீரென்று பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி சென்றனர். இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டனர். அதற்குள் அந்த ஆசாமிகள் தப்பித்து சென்றனர்.

இதை அறிந்த மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமையில் பா.ஜ.க.வினர் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காட்டூர் சரக உதவி கமிஷனர் வின்சென்ட் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு கிடந்த பாட்டிலை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

வெடிக்க வில்லை

கண்காணிப்பு கேமராவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் பெட்ரோல் நிரப்பிய திரியுடன் கூடிய பீர் பாட்டிலை பா.ஜ.க. அலுவலகத்தின் எதிரே வி.கே.கே. மேனன் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு வீசி விட்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

ஆனால் அந்த ஆசாமிகளின் முகம் சரியாக பதிவாகவில்லை. அந்த பெட்ரோல் வெடிகுண்டு வெடித்து அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெற வில்லை. இது குறித்து காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துணிக்கடை மீது குண்டுவீச்சு

இதற்கிடையே அதே நேரத்தில் கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள லட்சுமணன் என்பவரது துணிக்கடையில் பீர் பாட்டிலில் மண்எண்ணெய் நிரப்பிய வெடிகுண்டு வீசப்பட்டது. அதில் அங்கு துணிகள் வைத்திருந்த அட்டைப்பெட்டியில் மண்எண்ணெய் வெடிகுண்டு பட்டு கீழே விழுந்தது. ஆனால் தீ பற்றி வெடிக்க வில்லை. இந்த சம்பவம் குறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பா.ஜ.க.வினர் சாலை மறியல்

இந்த நிலையில் பாஜக அலுவலகம் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை காந்திபுரம் பஸ் நிலையம் எதிரே பா.ஜ.க.வினர் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதற்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.மறியலில் ஈடுபட்டவர்கள் பா.ஜ.க. அலுவலகம் மீது வெடிகுண்டு வீசியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.

தமிழ்நாட்டில் கோவை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பஸ் மீது கல்வீச்சு, மறியல் என போராட்டங்கள் நடந்தது. மேலும் கோவையில் நேற்று இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையான தினம் ஆகும். இந்த சூழலில் பா.ஜ.க. அலுவலகம் மற்றும் ஒப்பணக்கார வீதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வெடிகுண்டு அடுத்தடுத்து வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே கோவையில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக 5 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.