கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டதை கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையில் அரசு பஸ்கள் மீது கல்வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் செயல்பாடுகளை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) பிரிவு கண்காணித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் இந்த அமைப்பின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இந்த நிலையில் இந்த அமைப்பின் தலைவர்கள், நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நாடு முழுவதும் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் கோவை, மதுரை, சென்னை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்கள் உள்பட 12 இடங்களிலும், கேரள மாநிலத்திலும் இந்த சோதனை நடைபெற்றது.
கோவை நிர்வாகி
கோவையில் கரும்புக்கடை தெற்கு சவுகார் முதல் வீதியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ.எஸ்.இஸ்மாயில் (வயது 43) என்பவரின் வீடு உள்ளது. இங்கு நேற்று காலை 5.30 மணியளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 15 பேர் மத்திய ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்புடன் வந்து சோதனை நடத்தினார்கள். இதனால் அவரது வீட்டின் முன்பு பாதுகாப்புக்காக உள்ளூர் போலீசார் குவிக்கப்பட்டனர். இதுகுறித்து அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் இஸ்மாயில் வீடு முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சோதனையின்போது, இஸ்மாயில் வீட்டில் இருந்தார். அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து அவரது வீட்டில் இருந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நோட்டீசுகள் மற்றும் சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் வீட்டு முன்பு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவின் ஹார்ட்டிஸ்கையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இஸ்மாயிலை விசாரணைக்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
தேசிய செயலாளர் கைது
முன்னதாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் கர்நாடக மாநில முன்னாள் தலைவரும், தேசிய செயலாளருமான முகமது சாகிப், மங்களூரு-கஞ்சிக்கோடு ரெயில் மூலம் கர்நாடக மாநிலத்தில் இருந்து கோவை வருவதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை ரெயில் நிலையத்துக்கு அதிகாலை 4 மணிக்கு விரைந்து வந்து முகமது சாகிப் மற்றும் அவருடைய உதவியாளர் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். 2 பேரையும் கோவை விமானநிலையத்துக்கு கொண்டு சென்றனர். விசாரணைக்கு பின்னர் அவரது உதவியாளர் விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து தேசிய செயலாளர் முகமது சாகிப் மற்றும் கோவை நிர்வாகி இஸ்மாயில் ஆகிய 2 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து, விசாரணைக்காக காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து சென்றனர்.
சாலைமறியல் போராட்டம்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் கோவை நிர்வாகி இஸ்மாயில் கைது செய்யப்பட்டதை கண்டித்து, அவரது வீட்டின் முன்பு திரண்டிருந்த அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதேபோல கரும்புக்கடை பகுதியிலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலை மறியல் செய்ய முயன்றவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். இதனால் போலீசாருக்கும், முஸ்லீம் அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து கோவை ஒப்பணக்காரவீதி சந்திப்பு, சாய்பாபா காலனி, ஆத்துப்பாலம், குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
108 பேர் கைது
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 108 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
சாலை மறியிலில் போலீசுடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட மாவட்ட நிர்வாகி அப்துல் ரகுமான் உள்பட 11 பேரை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
2 பஸ்கள் மீது கல்வீச்சு
இந்த நிலையில் உக்கடம் நாஸ் தியேட்டர் அருகே 21 ஏ அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அந்த பஸ் மீது கல்வீசி தாக்கினார்கள். இதேபோல் 3 டி பஸ் கணபதியில் இருந்து கோவைப்புதூர் நோக்கி சென்றது. புட்டு விக்கி ரோடு பகுதியில் செல்லும்போது மோட்டார் கைக்கிளில் வந்த 2 ஆசாமிகள் பஸ்சின் முன்பகுதியில் கல்வீசி தாக்கினார்கள். இதில் முன்பகுதி கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீசிய ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் கோவையில் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.