மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை கைவிட்டனர்.
வேலைநிறுத்த போராட்டம்
மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் 25 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் சமீரன் ரூ.606 தினசரி ஊதியமாக நிர்ணயித்து உள்ளார். இந்த ஊதியத்தை வழங்காமல் ரூ.230 மட்டும் வழங்கி வந்ததாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் நேற்று முன்தினம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், பேச்சுவார்த்தை நடத்த அதிகாரி மற்றும் ஒப்பந்ததாரர் என யாரும் வராததால் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆஸ்பத்திரியில் தூய்மை பணி பாதிக்கப்பட்டது. தொடர்ந்து தூய்மை பணியாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தீர்வு காண தலைமை மருத்துவர் அலுவலகத்தில் மேட்டுப்பாளையம் தாசில்தார் மாலதி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஊதியம் வழங்கப்படும்
தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் கண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தனியார் நிறுவனத்தினர், பணியாளர்கள் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தை முடிவில் மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனர் அறிவுறுத்தியுள்ள 2021-2022-ம் ஆண்டுக்கான கூலியை நிலுவைத்தொகையுடன் வழங்குவதாகவும், மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனரிடம் இருந்து தனியார் நிறுவனத்திற்கு ஒரு மாதத்திற்குள் நிதி கிடைத்தவுடன் 2022-2023-ம் ஆண்டில் கோவை மாவட்ட கலெக்டர் அறிவித்த ஊதியமான ரூ.606-ஐ இ.எஸ்.ஐ., பி.எப். பிடித்தம் போக வழங்கப்படும்.
தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கப்படும். கழிப்பறையுடன் கூடிய ஓய்வு அறை வழங்கப்படும். தூய்மை பணியாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரமாக குறைப்பது, தூய்மை பணிக்கு நியமனம் செய்யப்பட்ட பணியாளர்கள் தூய்மை பணிக்கு மட்டுமே பயன்படுத்துவது, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என முடிவு செய்யப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதால் தூய்மை பணியாளர்கள் நேற்று மாலை வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டனர்.