பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்தது

0
78

பரம்பிக்குளம் அணையில் சங்கிலி அறுந்து, சுவர் இடிந்ததால் மதகு உடைந்தது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

பரம்பிக்குளம் அணை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கேரள வனப்பகுதியில் பரம்பிக்குளம் அணை உள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் காமராஜர் ஆட்சி காலத்தில் அணை கட்டப்பட்டது. இந்த அணையின் பராமரிப்பு, நீர்வரத்து கணக்கீடு உள்ளிட்ட பணிகள் தமிழக பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரம்பிக்கும் ஆழியாறு பாசன (பி.ஏ.பி.) திட்டத்தில்,இந்தஅணை முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்த அணைக்கு சோலையாறு அணை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து உள்ளது. 72 அடி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணையில் 17 டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைக்கலாம். அணையில் இருந்து சுரங்கப்பாதை வழியாக மின் உற்பத்தி நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மின் உற்பத்தி செய்த பின்னர், காண்டூர் கால்வாய் வழியாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

மதகு உடைந்தது

திருமூர்த்தி அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஆழியாறு புதிய ஆயக்கட்டு திட்டத்தில் 44 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பரம்பிக்குளம் அணை கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதனால் பரம்பிக்குளம் அணை முழு கொள்ளளவை எட்டியது.

நீர்வரத்தை பொறுத்து 3 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 1.45 மணியளவில் பரம்பிக்குளம் அணையில் திடீரென பயங்கர சத்தம் கேட்டது. இதையடுத்து அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அதிகாரிகள், ஊழியர்கள் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது நடுவே உள்ள மதகில் இணைக்கப்பட்டு இருந்த சங்கிலி அறுந்து, மேலே இருந்த சுவர் (பீம்) இடிந்து மதகு மீது விழுந்து இருந்தது. இதனால் மதகு ஒருபுறம் வளைந்து சேதமடைந்தது. இதையடுத்து நீரின் அழுத்தம் காரணமாக மதகு உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

அதிகாரிகள் ஆய்வு

இதனால் அணையில் இருந்து தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறி கொண்டிருக்கிறது. அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில் மதகு அடித்து செல்லப்பட்டு கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் முத்துசாமி, பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் தேவராஜன், பரம்பிக்குளம் அணை செயற்பொறியாளர் நரேந்திரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அணை முழு கொள்ளளவை எட்டி இருப்பதால் மதகை சீரமைப்பதில் சிக்கல் உள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

5.7 டி.எம்.சி. வீணாகும்

தற்போது எதிர்பாராதவிதமாக மதகின் சங்கிலி அறுந்ததால், நீரின் அழுத்தம் தாங்காமல் மதகு அடித்து செல்லப்பட்டது.

உடைந்த மதகு வழியாக வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேறி கொண்டிருக்கிறது. மற்ற 2 மதகுகள் வழியாக வினாடிக்கு தலா 200 கனஅடி வீதம் மொத்தம் 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. மேலும் பரம்பிக்குளம் அணையில் இருந்து திருமூர்த்தி அணைக்கு வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அடித்து செல்லப்பட்ட மதகின் எடை 32 டன் ஆகும். மதகு உடைந்த இடத்தில் தண்ணீர் வெளியேறுவது நிற்க 2 முதல் 3 நாட்கள் ஆகும். இதனால் 5.7 டி.எம்.சி. தண்ணீர் அணையில் இருந்து வீணாகும். இந்த தண்ணீரை கொண்டு பாசனத்திற்கு 3 சுற்றுகளாக தண்ணீர் வழங்க முடியும். உடைந்த மதகை சீரமைப்பதற்கு 1½ மாதங்கள் ஆகும். தூணக்கடவு அணைக்கு புதிதாக பொருத்த மதகு கொண்டு வரப்பட்டு உள்ளது. எனவே, அந்த மதகை பரம்பிக்குளம் அணையில் பொருத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.