கலெக்டர் ஆய்வு
ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா என மாவட்ட கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு படித்து வரும் மாணவர்களின் விவரங்களை தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார். மேலும் சமையல் அறையை ஆய்வு செய்தார். தொடர்ந்து தாசில்தார் அலுவலகம் மற்றும் ஆனைமலை தொடக்கப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்து தருவதோடு, மைதானத்தை சீரமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதியளித்தார். ஆய்வின் போது அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
விளையாட்டு மைதானம்
இதுகுறித்து பள்ளி மாணவர்கள் கூறியதாவது:- ஆனைமலை அரசு மேல்நிலை பள்ளியில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து 750-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 5 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் இருந்த மைதானத்தில், தாசில்தார் அலுவலகம் போன்ற அரசு கட்டிடங்கள் கட்டப்பட்டது. இதனால் மைதானத்தின் அளவு படிப்படியாக குறைந்தது. இதனால் மாணவர்கள் விளையாடுவதற்கு போதுமான இடவசதி இன்றி தவித்து வருகின்றனர். மேலும் சுற்றுச்சுவர் இல்லாததால் சமூக விரோத கும்பலின் கூடாரமாக உள்ளது.
தற்போது மைதானம் குண்டும், குழியுமாக விளையாட ஏதுவாக இல்லாமல் உள்ளது. இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் கபடி, கால்பந்து, தடகளம் போன்ற விளையாட்டு பிரிவுகளில் மாவட்ட, மாநில அளவில் சிறப்பாக விளங்கி வருகின்றனர். சிலர் மதுபானம் அருந்திவிட்டு மதுபாட்டில்களை வீசி செல்கின்றனர். இதனால் சில சமயங்களில் மாணவர்களின் காலை பதம் பார்க்கிறது. இதனை தடுக்கும் வகையில் மைதானத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைப்பதோடு, மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.