அழகு நிலைய ஊழியர் வெட்டிக்கொலை

0
87

துண்டிக்கப்பட்ட கை

கோவையை அடுத்த துடியலூர் பகுதியில் கடந்த 15-ந்தேதி குப்பை யில் துண்டிக்கப்பட்ட ஒரு ஆணின் கை கிடந்தது. அதை கைப்பற்றி துடியலூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே காட்டூர் போலீஸ் நிலையத்தில் பிரபு என்பவர் மாயமானதாக வந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அது தொடர்பாக விசாரித்த போது துண்டிக்கப்பட்ட கைக்கு உரியவர் பிரபு என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அழகு நிலைய ஊழியர்

ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்தவர் பிரபு (வயது 39). இவர், கோவை சரவணம்பட்டி வாடகைக்கு வீடு எடுத்து தங்கி காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள அழகு நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் 4 வருடங்களுக்கு முன்பு சாந்தி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

அவர், மாதம் 2 முறை ஈரோடு சென்று மனைவியை பார்த்து விட்டு வருவது வழக்கம். இவர், கடந்த மாதம் தனது மனைவியை பார்ப்ப தற்காக ஈரோட்டுக்கு சென்று விட்டு கோவை வந்து வேலை பார்த்து வந்தார்.

மாயமானதாக வழக்கு

அவர், கடந்த 14-ந் தேதி சரவணம்பட்டியில் உள்ள தனது அறையில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் திரும்பி வரவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி சாந்தி காட்டூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பிரபுவை தேடி வந்தனர்.

கேமராவில் காட்சி பதிவானது

இந்த நிலையில் வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் ஒரு குப்பைத் தொட்டியில் ஒரு ஆணின் இடது கை கிடந்தது. விரல் ரேகையை ஆய்வு செய்த போது அது காணாமல் போன அழகு நிலைய ஊழியர் பிரபுவின் கைரேகையுடன் ஒத்துபோனது.

இதைத்தொடர்ந்து பிரபு வசித்து வந்த இடம் மற்றும் சில இடங்க ளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீ சார் ஆய்வு செய்தனர். இதில், சின்னவேடப்பட்டியில் இருந்த ஒரு கண்காணிப்பு கேமராவில் பிரபு மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

பெண் விவகாரத்தில் கொலை

பிரபு, வேலை பார்த்த அழகு நிலையத்துக்கு அடிக்கடி சில பெண்கள் வந்து சென்றனர். அதில் 6 பெண்களுடன் அவர் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அழகு நிலையத்துக்கு வரும் பெண்களிடம் அவர் மிகவும் நெருக்கி பழகியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர், பெண்களிடம் அதிக நேரம் செல்போனில் பேசி வந்துள்ளார்.

எனவே பெண் விவகாரம் காரணமாக பிரபுவை மர்ம நபர்கள் கடத்தி சென்று மதுவாங்கி கொடுத்து வெட்டி கொலை செய்து இருக்கலாம் என்றும், மேலும் ஆத்திரம் அடங்காமல் அவரின் உடல் உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டி ஒவ்வொரு பகுதியிலும் வீசி சென்று இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

உடல் பாகங்கள் எங்கே?

தற்போது வெட்டப்பட்ட கை மட்டும் போலீசாருக்கு கிடைத்து உள்ளது. மற்ற உடல் உறுப்புகள் எங்கெங்கு வீசப்பட்டு உள்ளது என்று பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு நமச்சிவாயம் தலைமையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கூறுகையில், இந்த கொலையில் துப்புதுலங்கி விட்டது. மற்ற உடல் பாகங்களையும் தேடி வருகிறோம். கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.