சப்- கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

0
95

மின்சார துண்டிப்பு நடவடிக்கையை கைவிட கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

விவசாயிகள் முற்றுகை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி. பிரதான கால்வாய் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் கால்வாயின் இரு கரையின் அருகில் உள்ள கிணற்று பாசன விவசாயிகளுக்கு அதிகாரிகள் நோட்டீசு வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை, திருப்பூர் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நேற்று மாலை பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை திடீரென்று முற்றுகையிட்டனர்.

பின்னர் அவர்கள், சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவிடம், கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நோட்டீசு

பி.ஏ.பி. கால்வாய் கரையோரத்தில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு பி.ஏ.பி. அலுவலர்களால் நோட்டீசு கொடுக்கப் பட்டு வருகிறது. அதில், விவசாயிகளின் கிணறுகள் சட்டத்திற்கு புறம்பாகவும், அரசின் விதிமுறையை மீறி மின் இணைப்பு இருப் பதாகவும் கூறப்பட்டு உள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மின்சார வாரியம் மூலம் உரிய முறையில் மனுக்களை பெற்று, கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெறப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் கடந்த 10 ஆண்டுகளாக காக்க வைத்து, பின் விவசாய நிலங்களுக்கு வந்து அனைத்து ஆவணங்களையும் சரி பார்த்து மின்சாரம் வழங்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மின்சாரம், சட்டத்திற்கு புறம்பாக உள்ளது என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

போராட்டம்

60 ஆண்டுகளுக்கு முன்பு பி.ஏ.பி., பாசன கால்வாய் அமைப்ப தற்கு நிலங்களை கொடுத்து விட்டு, மீதி பூமியில் ஆடு, மாடு மேய்த்து சேர்த்து வைத்த பணத்தில் கிணறுகள் அமைத்து 10 ஆண்டுகள் காத்திருந்து பெற்ற மின்சாரம் எப்படி சட்டத்திற்கு புறம்பானதாகும். இந்த மின்சாரத்தை நம்பி பெரும்பாலான விவசாயிகள் தென்னை விவசாயம் செய்து வருகிறோம்.

ஏதோ சில விஷமிகளின் நடவடிக்கையால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றால் எங்களது உரிமையை கேட்க தயங்க மாட்டோம்.

எனவே இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும். மின்சாரம் பறிக்கப்பட்டால் மாவட்ட முழுவதும் போராட்டங்கள் நடத்துவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

விவசாயம் அழியும்

இது குறித்து விவசாய சங்கத்தினர் கூறுகையில், எல்லா விதமான தகுதியுடன் மின்சார அனுமதி கொடுத்தனர். மின்சாரத்தை துண்டித்தால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 10 லட்சம் ஏக்கர் விவசாயம் அழிந்து விடும்.

எனவே அரசு தலையிட்டு விவசாயிகளை பாதிக்காத வகையில் இந்த பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சாரத்தை துண்டிக்காமல் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்றனர்.