சினிமாவில் வாய்ப்பு தருவதாக ஏமாற்றி பலாத்காரம் செய்ததாக புகார் கூறியதால் தலைமறைவான தயாரிப்பாளர் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் பணம் பறிக்கும் நோக்கத்தில் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.
சினிமா தயாரிப்பாளர்
கரூர் மாவட்டம் நல்லிப்பாளையத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 31). இவர் சினிமா தயாரிப்பாளராக உள்ளார்.
இவர் மீது சென்னை ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி பொள்ளாச்சி மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில் சினிமாவில் கதாநாயகியாக தன்னை நடிக்க வைப்பதாக கூறி பொள்ளாச்சிக்கு தன்னை பார்த்திபன் வரவழைத்தார்.
அங்கு நடிகைக்கான தேர்வு நடக்கும்போது தனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாகவும், இதனால் தான் கர்ப்பமானதும், குழந்தை பெற்றால் கதாநாயகியாக நடிக்க முடியாது என்பதால் கர்ப்பத்தை கலைத்துவிடும்படி கூறி கலைத்துவிட்டதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
வீடியோ வெளியீடு
அதன்பேரில் போலீசார் பார்த்திபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதுபோன்று பார்த்திபன் தனக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுப்பதாக கூறி பலாத்காரம் செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் 2 இளம்பெண்கள் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தனர்.
இதையடுத்து தலைமறைவான பார்த்திபனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த நிலையில் பார்த்திபன் ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார்.
7 நிமிடங்கள் உள்ள அந்த வீடியோவில் நான் குற்றமற்றவன் என்றும், பணம் பறிக்கும் நோக்கத்தில் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளதாகவும் கூறி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஆதாரங்கள் இருக்கிறது
என் மீது புகார் கொடுத்து இருக்கும் 2 இளம்பெண்கள் பற்றி என்னுடன் வேலை செய்யும் அனைவருக்குமே நன்றாக தெரியும். அதில் ஒருவர் 2019-ம் ஆண்டில் நான் தயாரிக்கும் படத்துக்கு அவரை நடிக்க வைத்ததாக கூறி இருக்கிறார்.
நான் 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான் அந்த படத்தை தயாரிக்க பூஜை போட்டேன். அதற்கு முன்பு நான் அவரை எப்படி படத்தில் நடிக்க வைத்திருக்க முடியும்?.
மற்றொருவருக்கு, அவர் கேட்கும்போது எல்லாம் நான் பணம் கொடுத்து உள்ளேன். அவர் என்னிடம் இருந்து பணம் பெற்றதற்கான அனைத்து ஆதாரங்களும் இருக்கிறது.
இது அவருடைய அக்காள், அக்காள் கணவர், தாய் மற்றும் தந்தை என அனைவருக்கும் நன்றாக தெரியும். நான் எப்போது அவருக்கு பணம் கொடுக்காமல் இருந்தேனோ அதன்பின்னர்தான் அவர் என்மீது இதுபோன்ற புகார் கொடுத்து இருக்கிறார்.
பொய்யான குற்றச்சாட்டுகள்
அதுபோன்று தற்போது அவர்கள் கொடுத்து உள்ள புகாரை வாபஸ் வாங்க ரூ.20 லட்சம் வரை பேரம் பேசி உள்ளனர்.
அதற்கான ஆடியோ ஆதாரமும் என்னிடம் இருக்கிறது. எனவே முழுக்க, முழுக்க என்னிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில்தான் பொய்யான குற்றச்சாட்டுகளை அவர்கள் கூறி உள்ளனர்.
எனவே விரைவில் உங்களுக்கு நான் அதற்கான அனைத்து ஆதாரங்களையும் கொடுத்து நான் குற்றமற்றவன் என்று நிரூபிப்பேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை போலீசாரும் கைப்பற்றி உள்ளனர்.
அதில் பார்த்திபன் கூறுவது உண்மையா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.