கோவையில் பாதை மாறும் போதை மாணவர்களுக்கு வழிகாட்ட நடமாடும் உளவியல் ஆலோனை மையம் செயல்படுமா…?என்று கல்வியாளர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
நடமாடும் உளவியல் வாகனம்
கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு இருக்கும் மன அழுத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண கடந்த 2013-ம் ஆண்டில் நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் உருவாக்கப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் கல்வி மாவட்டங்களில் உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்காக வேன் ஒன்று வழங்கப்பட்டு அதில் உளவியல் ஆலோசகர் பயணித்து பள்ளிதோறும் மாணவர்களை சந்தித்து, அவர்களது பிரச்சினைகளை கேட்டு பதிவு செய்வது, ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுப்பது என்று பணிகளை செய்து வந்தனர்.
இதுபோல கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு உளவியல் ஆலோசனை நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டு இருந்தார். இதற்காக வாங்கப்பட்ட நடமாடும் வேன் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது வழக்கம். பின்னர் அந்த நடமாடும் வாகனத்தில் உளவியல் நிபுணர் சம்பந்தப்பட்ட பள்ளிகள் தோறும் சென்று மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு உளவியல் ஆலோசனைகளை கூறி வந்தார்.
முடக்கம்
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இதன் செயல்பாடுகள் முடங்கி உள்ளது. இதனால் நடமாடும் உளவியல் ஆலோசனை அளிக்கும் வாகனம் நகராமல் அப்படியே கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. எனவே தற்போது போதை பொருட்களுக்கு அடிமையாகும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தனியாக உளவியல் ஆலோசனை வழங்க இந்த வாகனத்தை பயன்படுத்தலாம் என்று கல்வியாளர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:-
சமீபகாலமாக பள்ளி மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி வருவது கவலை அளிக்கிறது.பெற்றோரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை சரியாக கண்காணிக்க முடிவதில்லை. தடம் மாறி செல்லும் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்தால் ஏதாவது ஒரு பிரச்சினையை உருவாக்கி, அதில் ஆசிரியர்கள் தவறு செய்வதுபோன்று சித்தரித்து விடுகின்றனர்.
மீண்டும் நியமிக்க வேண்டும்
இதனால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுரை கூறுவதை விட்டுவிட்டு பாடம் நடத்தும் வேலையை மட்டும் செய்தாலே போதும் என்ற மனநிலைக்கு வந்துவிடுவதாகவும் கூறப்படுகிறது.இந்த நிலை நீடித்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். எனவே போதைக்கு அடிமையாகும் மாணவர்களுக்கும், அவர்களும் நல்ல பிற மாணவர்களும் அதற்கு அடிமையாவதை தடுப்பதற்கும், உளவியல் ஆலோசகர் ஒருவரை மீ்ண்டும் நியமித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பயன்படுத்தாமல் முடங்கி கிடக்கும் நடமாடும் வாகனத்தை பயன்படுத்தி ஆலோசனை வழங்கலாம். மேலும் நீட், பொதுத்தேர்வு உள்ளிட்ட நேரங்களிலும் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்கவும், தற்கொலை எண்ணத்தை தவிர்க்கவும் இந்த நடமாடும் வாகனத்தை பயன்படுத்தி உளவியல் ஆலோசனை வழங்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
எது எப்படியோ…கோவையில் பாதை மாறும் போதை மாணவர்களுக்கு வழிகாட்ட நடமாடும் உளவியல் ஆலோனை மையம் செயல்படுமா…? என்பது கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.