பணிகள் முடிந்தும் திறக்கப்படாத தாவரவியல் பூங்கா

0
56

சுற்றுலா பயணிகள்

வால்பாறை பகுதியில் நிலவும் கால நிலை காரணமாக சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். ஆனால் அவர்களை கவரும் வகையில் வால்பாறையில் பெரிய அளவில் சுற்றுலா தலங்கள் இல்லாத நிலை உள்ளது.

ஆனாலும் இங்கு வருபவர்களுக்கு கூழாங்கல் ஆறு, சேலையார், நீரார் அணை போன்ற இடங்கள் மட்டுமே கண்டுகளிக்க உகந்ததாக உள்ளது.

ஆனால் கடந்த ஒரு மாதமாக கூழாங்கல் ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் கூழாங்கல் ஆற்றில் இறங்கி குளிப்பதற்கு போலீசார் தடை விதித்து விடுகின்றனர்.

இதனால் ஒரு சில இடங்களை பார்த்து விட்டு தங்களது அறைக்கு செல்லும் நிலை சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்டது.

தாவரவியல் பூங்கா

இதன் காரணமாக அதிக செலவு செய்து வால்பாறை வந்தும், மகிழ்ச்சியாக பொழுது போக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் கவலை அடைந்தனர்.

எனவே வால்பாறை வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் போதிய வசதிகளை செய்து பூங்கா போன்றவற்றை ஏற்படுத்த வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து வால்பாறை பி.ஏ.பி. காலனியில் நகராட்சி நிர்வா கம் சார்பில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டது. அங்கு அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டது. ஆனால் அந்த பூங்கா பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விடப்படாமல் பூட்டியே கிடக்கிறது.

திறக்க வேண்டும்

இதன் காரணமாக பூங்காவில் அமைக்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் பழுதடையும் நிலை உள்ளது. அதோடு அலங்கார செடிகளுக்கு மத்தியில் களை மற்றும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளது.

இதனால் விஷபூச்சிகள் நடமாட வாய்ப்பு உள்ளது. எனவே இனியும் காலம் கடத்தாமல் நகராட்சி நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுத்து தாவரவியல் பூங்காவை விரைவாக திறக்க வேண்டும்.

வால்பாறை பகுதி வியாபாரிகளின் பொருளாதாரம் சுற்றுலா பயணிகளை நம்பியே உள்ளது. எனவே நகரின் பொருளாதார சூழலை மேம்படுத்தும் வகையில் சுற்றுலா பயணிகளை கவரும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

அதற்கு முன்னோட்டமாக தாவரவியல் பூங்காவை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.