ரூ.6¾ கோடியில் சாலை பணிகள் தொடக்கம்

0
94

பொள்ளாச்சியில் ரூ.6¾ கோடியில் சாலை பணிகள் தொடக்கம்

மழைநீர் தேங்குவதை தடுக்க ரூ.6¾ கோடியில் சாக்கடை கால்வாய் வசதியுடன் சாலை பணிகள் தொடங்கி உள்ளது.

பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோடு சந்திப்பில் இருந்து பல்லடம் ரோடு 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. இதற்கிடையில் சில இடங்களில் 4 வழிச்சாலையை விட சிறிது சாலையின் அகலம் குறைவாக உள்ளது. மேலும் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் மழைக்காலத்தில் மழைநீர் செல்வதற்கு வழி இல்லாததால் சூடாமணி கூட்டுறவு சங்கம், 5 ரோடுகள் சந்திப்பு, கள்ளிப்பாளையம் பிரிவு ஆகிய இடங்களில் மழைநீர் தேங்குகிறது. இதையடுத்து மழைநீர் தேங்குவதை தடுக்க சாக்கடை கால்வாய் வசதியுடன் சாலை பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகள் தொடங்குவது தாமதமாகி வந்தது. இந்த நிலையில் சூடாமணி கூட்டுறவு சங்கம் எதிரே மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதாக நேற்று முன்தினம் ‘தினத்தந்தி’யில் படத்துடன் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து நேற்று உடனடியாக சாலை பணிகள் தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சாக்கடை கால்வாய் வசதி

பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோடு சந்திப்பில் இருந்து பல்லடம் ரோட்டில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ரூ.6 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தற்போது 15 மீட்டர் அகல 4 வழிச்சாலை உள்ளது. ஆனால் சில இடங்களில் மட்டும் 15 மீட்டருக்கும் குறைவாக சாலை உள்ளது. அந்த பகுதிகளில் சாலை அகலப்படுத்தப்படும். மேலும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வசதியாக பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்படுகிறது. இதை தவிர சாலையில் மழைநீர் தேங்குவதை தடுக்கவும், மழைநீர், கழிவுநீர் செல்வதற்கு கால்வாயும் கட்டப்படுகிறது. தற்போது வரை சாலையில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்படவில்லை. இருப்பினும் ஆக்கிரமிப்புகள் குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்படும். சாலை பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.