மல்லிகை கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை

0
74

ெபாள்ளாச்சியில் மல்லிகை கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை

ஓணம் பண்டிகை மற்றும் முகூர்த்த நாளையொட்டி பொள்ளாச்சியில் மல்லிகை பூ கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் கேரளாவுக்கு 5 டன் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது.

பூக்கள் விற்பனை

கேரளாவில் ஓணம் பண்டிகை மிகவும் பிரசித்தி பெற்றது. இதையொட்டி வகை, வகையாக பூக்களை வாங்கி வீடுகள், தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், அரசு அலுவலகங்களில் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்வார்கள். கேரளாவில் ஒரு வாரத்திற்கு முன்பே ஓணம் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கி விட்டது.

இதேபோன்று பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மலையாள மக்களும் ஓணம் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மேலும் ஓணம் பண்டிகையுடன், முகூர்த்த நாட்களும் வந்ததால் விற்பனையும் அதிகரித்து. இதனால் பூக்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதுகுறித்த பூ வியாபாரிகள் கூறியதாவது:-

மல்லிகை பூ

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக ஓணம் பண்டிகை களையிழந்து காணப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக உள்ளதால் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டனர். இதனால் ஓணத்தையொட்டி பூக்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. வெளிமாவட்டங்கள் மற்றும் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இதுவரைக்கும் பொள்ளாச்சி மார்க்கெட்டில் இருந்து கேரளாவுக்கு 5 டன் பூக்கள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் மார்க்கெட்டில் 10 டன் வரை பூக்கள் விற்பனை ஆகி உள்ளது. ஓணம் பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்கள் வருவதால் பூக்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பூக்கள் விற்பனை நன்றாக உள்ளதால் பூக்களுக்கு கிராக்கி ஏற்பட்டு உள்ளது. மல்லிகை பூ மட்டும் கிலோ ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பூக்கள் விலை

பொள்ளாச்சி தேர்நிலை மார்க்கெட்டில் பூக்கள் விலை விவரம் (ஒரு கிலோ) :-

மல்லிகை ரூ.2500 முதல் ரூ.3000 வரையும், சம்பங்கி ரூ.160 முதல் ரூ.200, செண்டு மல்லி ரூ.80 முதல் ரூ.100, கோழிக்கொண்டை ரூ.80 முதல் ரூ.100, அரளி ரூ.250 முதல் ரூ.300-க்கும், வாடாமல்லி ரூ.250 முதல் ரூ.300-க்கும், சில்லி ரோஸ் ரூ.160 முதல் ரூ.200, முல்லை ரூ.1000 முதல் ரூ.1200 வரை விற்பனை ஆனது.