வால்பாறை கூழாங்கல் ஆற்றில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை

0
92

வால்பாறை கூழாங்கல் ஆற்றில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து வால்பாறை கூழாங்கல் ஆற்றில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நடைபெற்றது.

ஒத்திகை

வால்பாறையில் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. பேரிடர் மேலாண்மை தலைவரும், மாவட்ட கலெக்டருமான சமீரன் உத்தரவின் பேரில் நடந்த நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட ஆய்வுக்குழு அலுவலரும், வால்பாறை கண்காணிப்பு அலுவலருமான முருகன் தலைமை தாங்கினார். வால்பாறை தாசில்தார் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து வால்பாறை தீயணைப்பு துறை அதிகாரி தங்கராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கூழாங்கல் ஆற்றில் தவறி விழுந்தவர்களை எவ்வாறு மீட்டு சிகிச்சைக்காக அழைத்துச் செல்வது, தண்ணீரில் சிக்கிக் கொண்டவர்களை ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்டு வருவது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

முதலுதவி சிகிச்சை

வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் டாக்டர் சதீஷ்குமார் தலைமையில் செவிலியர்கள் தண்ணீரில் விழுந்து மீட்டு வந்தவர்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளித்து தீவிர சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்புவது என்பது குறித்து விளக்கம் அளித்தனர்.

வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையில் ஆணையாளர் பாலு முன்னிலையில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாமில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வரக்கூடிய இடங்களில் எவ்வாறு பொது சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மண்சரிவு

கனமழை சமயத்தில் மண்சரிவு ஏற்பட்டு மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டால், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் போக்குவரத்தை சரிசெய்து மேலும் மண்சரிவு ஏற்படாமல் தடுப்பது குறித்து நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் உமாமகேஷ்வரி விளக்கமளித்தார்.

மேலும் மழை நேரங்களில் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து மின்சார வாரியத்தின் உதவிப்பொறியாளர் பன்னீர்செல்வம் பேசினார். தொடர்ந்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பது, அணையின் பாதுகாப்பு குறித்து உதவி செயற்பொறியாளர் சின்னராஜ் பேசினார்.

விழிப்புணர்வு பேரணி

இதையடுத்து மழைநேரங்களில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து துறை மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிக்குமார், வால்பாறை அரசு கலை, அறிவியல் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட பேராசிரியர் ரூபா, தாசில்தார் விஜயகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் ஆகியோர் பேசினர்.

இந்த பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி முகாம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வால்பாறை அரசு கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.