ரெயில் தண்டவாளத்தின் கீழ் தேங்கிய தண்ணீரில் கல்லூரி பஸ் சிக்கியது

0
76

ரெயில் தண்டவாளத்தின் கீழ் தேங்கிய தண்ணீரில் கல்லூரி பஸ் சிக்கியது

கோவையில் கொட்டித்தீர்த்த கனமழையால் ரெயில் பாலத்தின் கீழ் தேங்கிய தண்ணீரில் கல்லூரி பஸ் சிக்கியது. அதில் இருந்த 20 மாணவ-மாணவிகள் மீட்கப்பட்டனர்.

கனமழை

கோவையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இல்லை. இந்த நிலையில் பிற்பகல் 3.30 மணியளவில் மழை பெய்ய தொடங்கி யது.

ஒரு மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கோவையில் முக்கிய சாலையில் மழைநீர் ஆறுபோல ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போன்று தேங்கி நின்றது.

இந்த மழை காரணமாக கோவை- அவினாசி ரோடு, சத்தி ரோடு, திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளே தெரியாத அளவுக்கு தண்ணீர் ஓடியதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

வாகனங்கள் செல்ல தடை

இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவை- அவினாசி ரோடு உப்பிலிபாளை யம் சிக்னல் அருகே மேம்பாலத்தின் கீழ்பகுதி சுரங்கப்பாதை, வடகோவை மேம்பால சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இது போல் கோவை ரெயில் நிலையம் அருகே லங்கா கார்னர் பாலத்தின் கீழ் பகுதி, வடகோவை அருகே கிக்கானி பள்ளி ரெயில்வே பாலத்தின் கீழ்ப்பகுதியிலும் மழைநீர் அதிகளவில் தேங்கி நின்றது.

கோவை சங்கனூரில் உள்ள ரெயில் தண்டவாளத் தின் கீழ் உள்ள பாதையில் தண்ணீர் அதிகளவில் தேங்கியது. அப்போது அந்த வழியாக வந்த தனியார் கல்லூரி பஸ் சிறிது தூரம் சென்றது. அங்கு 4 அடி உயரத்துக்கும் மேல் தண்ணீர் இருந்ததால் திடீரென்று அந்த பஸ் நின்றது.

20 மாணவர்கள் மீட்பு

இதனால் அந்த பஸ்சுக்குள் இருந்த மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கவுண்டம்பா ளையம் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அந்த பஸ்சுக்குள் சிக்கித்தவித்த 20 மாணவ-மாணவிகளை கயிறு கட்டி மீட்டனர்.

இது போன்று கோவை ரெயில் நிலையம் அருகே லங்கா கார்னர் ரெயில்வே பாலத்தின் கீழ்ப்பகுதியில் தேங்கி நின்ற தண்ணீரில் ஆம்புலன்ஸ் வேன் ஒன்று சென்றது. அந்த ஆம்புலன்ஸ் வேன் திடீரென்று சிக்கிக் கொண்டது. அதை அங்கிருந்தவர்கள் தள்ளி வெளியே மீட்டனர்.

பொதுமக்கள் அவதி

கோவை- அவினாசி சாலையில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சியபடி சென்றன. இதனால் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் அவதிப்பட்டனர். சாலைகளில் மழைநீர் தேங்கிய தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க போலீசார் வாகனங்களை வேறு பாதையில் திருப்பி விட்டனர்.

கோவை கணபதி, மணியகாரம்பாளையம், சின்னவேடம்பட்டி, சுப்பநாக்கன்புதூர், உடையாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கணபதி மாநகரில் மரம் சாய்ந்தது. இதை அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் அந்த மரத்தை அங்கிருந்து அகற்றினார்கள்.