முதல் கருத்து கேட்பு கூட்டம்
தமிழக அரசு அறிவித்த மின் கட்டணம் உயர்வு குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் தொழிற்துறை உள்பட அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்பு முதல் கூட்டம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பில் கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது.
இதற்கு ஆணைய தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். உறுப் பினர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். இதில் கொடிசியா, விசைத்தறியாளர்கள், டேக்ட், மோட்டார் பம்ப் செட் உற்பத்தியாளர் கள், காட்மா, நுகர்வோர் சங்கங்கள் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
பீக் ஹவர் கட்டணம்
இதில் பங்கேற்ற தொழிற்துறையினர் கூறியதாவது:-
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தொழிற்துறை பாதிக்கப்பட்டது. தற்போது அந்த பாதிப்பில் இருந்து தொழிற்துறை மீண்டு வருகிறது. ஆனாலும் மூலப்பொருட்கள் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.
காலை 6.30 மணி முதல் பகல் 10.30 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் பீக் ஹவர் நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு நிர்ணயம் செய்ததை விட கூடுதலாக 25 சதவீதம் வரை மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என்று அறிவிக்கப் பட்டு உள்ளது. உயர்அழுத்த மின் இணைப்பு தொழிற்சாலைகளுக்கு நிலைக்கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் தொழிற்துறை கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
தொழிலாளர்கள் பாதிப்பு
பம்ப்செட் மோட்டார்களுக்கு ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. மின் கட்டணத்தையும் உயர்த்தி னால் பம்ப்செட்களின் விலை உயரும். இதனால் விவசாயிகள் பாதிக் கப்படுவார்கள். குஜராத்துடன் போட்டியிட முடியாத நிலை ஏற்படும். எனவே மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
உயர் அழுத்த மின்சார கட்டணமாக முன்பு 1 கிலோ வாட் முதல் 100 கிலோ வாட் வரை பிரித்து இருந்தனர். தற்போது அதை 3 ஆக பிரித்து நிலைக்கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்தி விட்டனர். இதனால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், வெட் கிரைண்டர் உற்பத்தி, விசைத்தறிகள் என அனைத்து தொழில்களும் பாதிக்கப்ப டும். அதை நம்பி உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். ஒருசில தொழிற்துறையினர் இந்த மின் கட்டண உயர்வை 2 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றனர்.
இதைத்தொடர்ந்து மதுரையில் நாளையும் (வியாழக்கிழமை), சென்னையில் வருகிற 22-ந் தேதியும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.