பொள்ளாச்சி நகரில் விளம்பர பலகைகள் அகற்றம்

0
87

பொள்ளாச்சி நகரில் விளம்பர பலகைகள் அகற்றம்

பொள்ளாச்சி நகரில் விளம்பர பலகைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

விளம்பர பலகைகள்

பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் ‘என் குப்பை என் பொறுப்பு’ திட்டத்தின் கீழ் விளம்பர பலகைகள், நோட்டீசுகளை அகற்ற கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை முதல் கோவை ரோடு, மகாலிங்கபுரம், நேதாஜி ரோடு, உடுமலை ரோடு மற்றும் முக்கிய சாலைகளில் இருந்த விளம்பர பலகைகள் அகற்றும் பணி நடைபெற்றது.

இந்த பணிகளை நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், ஆணையாளர் தாணுமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது நகரமைப்பு ஆய்வாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

தூய்மை பணிகள்

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின்படி ‘என் குப்பை என் பொறுப்பு’ என்பதை வலியுறுத்தி பல்வேறு தூய்மை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டு உள்ள விளம்பர பலகைகள், தட்டிகள், பாதைகள், நோட்டீசுகள் அகற்றப்பட்டு உள்ளன. இதற்காக 5 குழுக்கள் அமைக்கப்பட்டு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதன்படி சாலையோரங்களில் உள்ள பழுதடைந்த உபயோகமற்ற உரிமை கோராமல் உள்ள வாகனங்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பொள்ளாச்சி நகரை தூய்மையாக வைத்துக் கொள்ள நகராட்சிக்கு பொதுமக்கள், வணிக நிறுவனத்தினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.