கடை, வீடுகளில் தேசிய கொடி ஏற்றம்

0
68

வால்பாறையில் கடை, வீடுகளில் தேசிய கொடி ஏற்றம்

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நடைபெறுவதை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகள் நேற்று முதல் நாளை (திங்கட்கிழமை) வரை அனைத்து வீடுகளிலும் கடைகள் வணிக நிறுவனங்களிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது. இதனைத்தொடர்ந்து வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக தேசிய கொடி வழங்கப்பட்டது. வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு மட்டும் ரூ.35-க்கு தேசிய கொடி விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து கடைகள் வணிக நிறுவனங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதேபோல பெரும்பாலான வீடுகளில் நேற்று காலை தேசிய கொடி ஏற்பட்டது.

இந்த நிலையில் வீடுகள் மற்றும் கடைகளில் 15-ந் தேதி வரை தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் கையில் தேசிய கொடியை ஏந்தியபடி சென்றனர்.

முன்னதாக கல்லூரி வளாகத்தில் நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையிலும் கல்லூரி முதல்வர் செல்லமுத்துக்குமாரசாமி, நகராட்சி மேலாளர் சலாவுதீன் துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் தேசிய மாணவர் படையினர் தேசிய கொடியை கைகளில் ஏந்தி 75 வது ஆண்டை குறிக்கும் வகையில் 75 எண் வடிவத்தில் அணிவகுத்து நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.