9.12 லட்சம் வீடுகளுக்கு மீத்தேன் சமையல் கியாஸ் இணைப்பு

0
82

9.12 லட்சம் வீடுகளுக்கு மீத்தேன் சமையல் கியாஸ் இணைப்பு

சமையல் எரிவாயு

தற்போது மத்திய அரசின் பல்வேறு எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் வீடுகளுக்கு எல்.பி.ஜி. சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனை தவிர்த்து மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் மீத்தேன் சமையல் கியாஸ் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள 9 லட்சத்து 12 ஆயிரம் வீடுகளுக்கு குழாய் மூலம் மீத்தேன் சமையல் கியாஸ் வழங்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

இதற்காக மாவட்டம் முழுவதும் 230 கிலோ மீட்டர் தூரத்திற்கு பெரிய இரும்பு குழாய்களும், 14 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலி எத்திலின் குழாய்களும் பதிக்கப்பட உள்ளன. இதுகுறித்து ஐ.ஓ.சி.எல். மேலாளர் சுரேஷ் கூறியதாவது:-

கேரள மாநிலம் கொச்சிக்கு வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில் திரவ நிலையில் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு எனப்படும் மீத்தேன் கியாஸ் (சி.என்.ஜி.) கொண்டு வரப்படும் பின்னர் அங்கிருந்து பெங்களூருவுக்கு அந்த மீத்தேன் சமையல் கியாஸ் குழாய் மூலம் கொண்டுசெல்லப்படுகிறது.

இதில் கேரள மாநிலம் கூட்டாடு பகுதியில் இருந்து கோவைக்கு இரும்பு குழாய்கள் மூலம் மீத்தேன் கியாஸ் கொண்டு வரப்படும்.

இவ்வாறு கொண்டு வரப்படும் மீத்தேன் கியாஸ் பிச்சனூர் பகுதியில் இருந்து கோவையின் அனைத்து பகுதிகளுக்கும் வினியோகம் செய்யப்படும்.

கோவை மாநகர் மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள சிறு கிராமங்களுக்கு கூட இந்த மீத்தேன் சமையல் கியாஸ் குழாய் மூலம் வினியோகம் செய்யப்படும்.

இதற்கான பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. வருகிற 2029-ம் ஆண்டிற்குள் இந்த பணிகள் அனைத்தையும் முடிக்க திட்டமிட்டு உள்ளோம்.

வினியோகம்

மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வீதிகள், சாலைகளுக்கு குழாய்கள் மூலம் மீத்தேன் கியாஸ் கொண்டு செல்லப்பட்டு, அதன்பின்னர் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும். இதற்காக ஒவ்வொரு வீட்டின் சமையல் அறை பகுதியில் மீட்டர் பொருத்தப்பட்டு கியாஸ் பயன்பாடு கணக்கிடப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும்.

கோவை மாநகரில் மட்டும் 6 லட்சம் உள்பட மாவட்டம் முழுவதும் 9 லட்சத்து 12 ஆயிரம் வீடுகளுக்கு இந்த இணைப்பு கொடுக்கப்படும்.

தற்போது மதுக்கரை, எட்டிமடை, குறிச்சி, எட்டிமடை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வருகிற மார்ச் மாதத்திற்குள் இணைப்பு கொடுத்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

தற்போது டெல்லி, குஜராத், மும்பை உள்ளிட்ட இடங்களில் வீடுகளுக்கு வெற்றிகரமாக மீத்தேன் கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.