வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சோலையாறு அணையில் இருந்து உபரிநீர் கேரளாவிற்கு வெளியேற்றப்படுகிறது.
சோலையார் அணை நிரம்பியது
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள் மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக சோலையாறு அணை நிரம்பி கடந்த 28 நாட்களாக தனது முழு கொள்ளளவை தாண்டிய நிலையில் காணப்படுகிறது.
இந்த நிலையில் வால்பாறை பகுதி முழுவதும் கடந்த சில நாட்க ளாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து கனமழையாக பெய்து வருகிறது.
இதன் காரணமாக கடந்த 4 நாட்களாக வால் பாறை பகுதியில் இருக்கும் அனைத்து பள்ளிக்கூடங்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் விடுமுறை அளிக்கப்பட்டது.
உபரிநீர் வெளியேற்றம்
இதற்கிடையே கனமழை காரணமாக சோலையாறு அணைக்கு வினாடிக்கு வினாடி தண்ணீர் வரத்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. சோலையாறு அணை ஏற்கனவே முழு கொள்ளள வான 160 அடியை எட்டிய நிலையில் தொடர்ந்து தண்ணீர் வரத்து உள்ளது.
எனவே அணையின் பாதுகாப்பு கருதி கடந்த 2-ந் தேதி அதிகாலை முதல் அணையின் மதகுகள் திறக்கப்பட்டு உபரி நீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டது.
ஆனாலும் வால்பாறையில் மழை குறைய வில்லை. மேல்நீரார், கீழ்நீரார் அணை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.
தொடர்ந்து மழை பெய்வதால் மதகுகள் அடைக்கப்பட வில்லை. கேரளாவிற்கு தொடர்ந்து 5 நாட்களாக மணிக்கு 1700 கன அடி உபரிநீர் சென்று கொண்டு இருக்கிறது.
மின் நிலையம் இயக்கம்
சோலையாறு அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 438 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து மின் நிலையம் -1 இயக்கப்பட்டு சேடல்பாதை வழியாகவும், பரம்பிக் குளம் அணைக்கு 3 ஆயிரத்து 569 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் சோலையாறு மின்நிலையம் -2 இயக்கப்பட்டும் மதகுகள் வழியாகவும் 3 ஆயிரத்து 381 கன அடி தண்ணீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேல்நீரார் அணையில் இருந்து 2 ஆயிரத்து 52 கன அடித் தண்ணீரும், கீழ் நீரார் அணையில் இருந்து 541 கன அடி தண்ணீரும் சோலையாறு அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
ஆர்ப்பரித்து ஓடும் தண்ணீர்
இது போல் வால்பாறையில் உள்ள ஆறுகள் மற்றும் நீரோடை களில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடிக் கொண்டு இருக்கிறது. இதை கேரளா மற்றும் தமிழக சுற்றுலா பயணிகள் ரசித்தபடி செல்கின்ற னர். மேலும் சோலையாறு அணைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.
வால்பாறையை பொறுத்த வரை கடந்த ஆண்டு ஜூன் மாதத் தில் இருந்து இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வரையில் பெரும்பா லான நாட்களில் மழை பெய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.