தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
பக்தர்கள் செல்ல தடை
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. பொள்ளாச்சி பகுதியில் நேற்று காலை முதல் குளிர்ச்சியான காலநிலை நிலவியது. மேலும் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதற்கிடையில் கடந்த 2 நாட்களாக வனப்பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பாலாற்றின் இருகரைகளையும் தொட்டப்படி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
பொள்ளாச்சி அருகே சோமந்துறைசித்தூரில் உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதை தொடர்ந்து பக்தர்கள் ஆற்றின் கரையோரத்தில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் அத்துமீறி செல்வதை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சில இடங்களில் தரைப்பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பரம்பிக்குளம் அணை
நேற்று காலை 8 மணி நிலவரப்படி பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 13,617 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 14,869 கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. ஆழியாறு அணைக்கு இரவு 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,108 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2,865 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணையின் நீர்மட்டம் 117.70 அடியாக இருந்தது.
குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு குறையாததால் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அப்பர் ஆழியாறில் இருந்து ஆழியாறு அணைக்கு அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் நவமலை ஆற்றில் பாலத்தை மூழ்கடித்தப்படி தண்ணீர் சென்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மழை அளவு
நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
சோலையார்-132, பரம்பிக்குளம்-58, ஆழியாறு-44, திருமூர்த்தி-37, அமராவதி-19, வால்பாறை-107, மேல்நீராறு-194, கீழ்நீராறு-116, காடம்பாறை- 37, சர்க்கார்பதி-57, வேட்டைக்காரன்புதூர்-35.20, மணக்கடவு-8, தூணக்கடவு-58, பெருவாரிபள்ளம்-64, அப்பர் ஆழியாறு-21, நவமலை-24, பொள்ளாச்சி-15, நல்லாறு-38, நெகமம்-9.