மேற்கூரைகள் சேதம்
வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை கடந்த 10 நாட்களாக தீவிரமடைந்து பெய்து வருகிறது. தொடர் மழையால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. சோலையாறு அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் வால்பாறையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. வால்பாறை காந்தி நகர் பகுதியில் மரம் விழுந்து 2 வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன.
வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 9 இடங்களில் மரங்கள் விழுந்தும், மண்சரிவு ஏற்பட்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் உமா மகேஷ்வரி தலைமையில், உதவிபொறியாளர் பிரகாஷ் முன்னிலையில் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் சாலையின் குறுக்கே விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர்.
மணல் மூட்டைகள்
மேலும் மண்சரிவை அகற்றி மணல் மூட்டைகளை அடுக்கி பாதிப்பு ஏற்படாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில் வரக்கூடிய அரசு பஸ் ஓட்டுனர்கள், தனியார் வாகனங்கள், அதிக பாரங்களுடன் வரக்கூடிய லாரிகள், சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை கவனமாகவும் சாலையில் எதிரே வரக்கூடிய வாகனங்களுக்கு வழிவிடும் சமயத்திலும் மிகவும் கவனமாக வாகனங்களை ஒட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தொடர் மழை காரணமாக வருவாய்த்துறை உள்பட அனைத்துத்துறை அதிகாரிகளும் உஷார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க ஒலிபெருக்கியில் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.