விளையாட்டு மைதானம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார் -முன்னாள் மாணவர்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை

0
100

ஆனைமலை அரசு பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார் தெரிவித்த முன்னாள் மாணவர்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

விளையாட்டு மைதானம்

ஆனைமலை தாலுகாவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 1200 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்தநிலையில் பள்ளியில் காலை, மாலை என 2 வேளையும் மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி செய்தும் முதியோர்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பள்ளி மைதானத்தில் ஒரு பகுதியில் தாலுகா அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதனால் மைதானத்தின் பரப்பளவு குறுகியுள்ளது. தாலுகாவுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் பள்ளி மைதானத்திலேயே நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளவும் இடையூறான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து முன்னாள் மாணவர்கள், பேரூராட்சி நிர்வாகத்தினர் இதுதொடர்பாக புகார் மனு கொடுத்தனர். மேலும் போராட்டம் நடத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை

இதுபற்றி அறிந்ததும் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் மற்றும் அதிகாரிகள், போலீசார் அங்கு சென்று, முன்னாள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது முன்னாள் மாணவர்கள் கூறியதாவது:- ஆனைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு ஏராளமான வீரர்கள் தேர்வாகியுள்ளனர். மேலும் விளையாட்டு இட ஒதுக்கீடு மூலம் ஏராளமான மாணவர்கள் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். பள்ளி மைதானத்தில் தாலுகா அலுவலகம் கட்டத் தொடங்கியதிலிருந்து மைதானம் புதர்கள் சூழ்ந்து கனரக வாகனங்கள் மைதானத்தில் சென்று மேடு பள்ளமாக ஆனது. இதனால் மழை நீர் தேங்கி நின்றது. பள்ளி மாணவர்கள் விளையாட்டு வீரர்களும் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலும் மைதானத்தின் பரப்பளவு குறைந்துள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, மைதானத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

https://www.dailythanthi.com/News/State/complaint-about-encroachment-of-playground-in-anaimalai-govt-school-officials-talk-to-former-students-761456