தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

0
97

 

கிணத்துக்கடவில் தக்காளி விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

வரத்து அதிகரிப்பு

கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் மானாவாரி மற்றும் தரிசு நிலங்களில் தக்காளி விவசாயம் அதிகளவு நடைபெற்று வருகிறது. குறிப்பாக கிணத்துக்கடவு, சொக்கனூர், முத்துகவுண்டனூர், நெம்பர் 10 முத்தூர், வடபுதூர், கல்லாபுரம், சிங்கையன்புதூர், நல்லட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி பயிரிடப்பட்டு உள்ளது. தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்து உள்ளது. விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். இந்தநிலையில் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்து உள்ளது. தற்போது பிற மாவட்டங்களில் தக்காளி சீசன் தொடங்கி விட்டது. இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து தக்காளிகளை கொள்முதல் செய்ய கிணத்துகடவு தினசரி காய்கறி சந்தைக்கு வியாபாரிகள் குறைவாக வந்தனர்.

விவசாயிகள் கவலை

கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில் விளையும் தக்காளிகள் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை மற்றும் கேரளாவுக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்து எடுத்து செல்கின்றனர். தினசரி காய்கறி சந்தையில் கடந்த நவம்பர் மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.79 வரை விற்பனையானது. கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் நேற்று நடந்த ஏலத்திற்கு மொத்தம் 15 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.7.25-க்கு ஏலம் போனது. தக்காளி விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து மழை பெய்து வந்ததால், செடிகளில் காய்த்திருந்த தக்காளிகள் சேதமடைந்தும், அழுகியும் வருகின்றன. இருப்பினும், கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்து உள்ளது. தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.