ஆடிப்பெருக்கையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
ஆடிப்பெருக்கு
ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை, ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கையொட்டி இறந்துபோன தங்களது குழந்தைகள், கல்யாணம் ஆகாமல் இறந்து போன பெண்கள் ஆகியோருக்கு படையல் வைத்து வழிபடுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவிலில் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து முதல் கால பூஜை, மதியம் 12 மணிக்கு இரண்டாம் கால பூஜை நடந்தது. இதில் மாரியம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஆடிப்பெருக்கையொட்டி கோவை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகள் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
சிறப்பு பூஜை
கிணத்துக்கடவு சிவலோகநாதர் உடனமர் சிவலோகநாயகி கோவில், பொன்மலை வேலாயுதசாமி கோவில், கரிய காளியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. கோவில்களுக்கு பக்தர்கள் குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தனர். ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர். கோவில்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் ஆடிப்பெருக்கை பக்தர்கள் கொண்டாடினர்.
பொள்ளாச்சி
ஆடிப்பெருக்கையையொட்டி பொள்ளாச்சி மாரியம்மன் கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில், அய்யப்பன் கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆடிப்பெருக்கையொட்டி பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகள் மட்டுமல்லாது, பிற மாவட்டங்களில் இருந்தும் அம்பராம்பாளையம் ஆழியாற்றிற்கு வந்திருந்தனர்.
அவர்கள் கன்னிமார் பூஜை செய்து வழிப்பட்டனர். அதை தொடர்ந்து பூஜை செய்த பொருட்களை ஒரு வாழை இலையில் வைத்து, கற்பூரம் ஏற்றி, ஆற்றில் விட்டனர். மேலும் புதுமண தம்பதிகள் தாலி கயிற்றை மாற்றிக்கொண்டனர்.