புனிதநீராட குவிந்த பொதுமக்கள்- பட்டீசுவரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்

0
89

ஆடிப்பெருக்கையொட்டி பேரூர் படித்துறையில் புனிதநீராட பொதுமக்கள் குவிந்தனர். மேலும் அவர்கள் பட்டீசுவரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

ஆடிப்பெருக்கு

ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கையொட்டி (ஆடி 18) பேரூர் நொய்யல் ஆற்று படித்துறையில், இறந்துபோன தங்களது குழந்தைகள், கல்யாணம் ஆகாமல் இறந்து போன பெண்கள் ஆகியோருக்கு இலைப்படையல் வைத்து, 7 கூழாங்கற்களை கன்னிமார் தெய்வங்களாக உருவகித்து படையல் வைத்து வழிபடுவது வழக்கம். அவ்வாறு வழிபாடு செய்வதன் மூலம், இறந்து போன குழந்தைகளின் பித்ருதோஷம் நீங்கும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை.

இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக கோவில் நிர்வாகம் சார்பில் பேரூர் படித்துறையில் ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைவு காரணமாக ஆடிப்பெருக்கு விழா நடத்த மாவட்டம் மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்தது.

புனிதநீராடினர்

இதன் காரணமாக பஸ்களில் ஏராளமான பொதுமக்கள் பேரூர் நொய்யல் ஆற்றுக்கு வரத் தொடங்கினர். பின்னர் அவர்கள் ஆற்றுப்பகுதியில் குவிந்தனர். நொய்யல் ஆற்றின் இருகரைகளிலும் அமர்ந்து இறந்து போன குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு இலைப் படையல் வைத்து 7 சப்த கன்னிமார் வழிபாடு செய்தனர். தொடர்ந்து அங்கிருந்த பசுமாடு கன்றுகளுக்கு அகத்திக்கீரைகள் வழங்கியதோடு நொய்யல் ஆற்றோரம் அமர்ந்திருந்த சாதுக்கள் மற்றும் பிச்சைக்காரர்களுக்கு அன்னதானங்களை வழங்கினர். இதேபோல் புதுமண தம்பதிகள் தாலியை மாற்றிக் கொண்டனர். இதேபோல் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு வழிபாடு செய்தனர். மேலும் ஆற்றில் புனிதநீராடிவிட்டு பேரூர் பட்டீசுவரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

போக்குவரத்து மாற்றம்

ஆடிப்பெருக்கு விழா என்பதால், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று காலை முதலே ஏராளமானோர் பேரூருக்கு வரத் தொடங்கியதால் காலை 8 மணிக்கு மேல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக, மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், ஆலாந்துறை பகுதியிலிருந்து பேரூர் வழியாக வரும் வாகனங்கள், பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி அலுவலகம் அருகே சுண்டக்காமுத்தூர், கோவைப்புதூர் வழியாகவும், காந்திபுரம் பகுதியில் இருந்து, பேரூர் நோக்கி வரும் வாகனங்கள், பேரூர் தமிழ் கல்லூரியுடன் திருப்பி விடப்பட்டது. மேலும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு, கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.