ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து வருகிற 21-ந்தேதி பேரணி- பி.ஏ.பி. விவசாயிகள் கூட்டத்தில் முடிவு

0
85

 

ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து வருகிற 21-ந்தேதி பேரணி- பி.ஏ.பி. விவசாயிகள் கூட்டத்தில் முடிவு

ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து வருகிற 21-ந்தேதி பேரணி நடைபெறும் என்று பி.ஏ.பி. விவசாயிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஆலோசனை கூட்டம்

சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிப்புத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பி.ஏ.பி. விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பரம்பிகுளம், ஆழியார் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ஈசன் முருகசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நிர்வாகிகள் பேசியதாவது:- கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் தாகத்தை தீர்த்து வேளாண்மையை மேம்படுத்தி, உழவர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு உதவிய பி ஏ.பி. பாசன திட்டம் ஆண்டுக்கு 8 டி.எம்.சி. நீர் பற்றாக்குறையால் கடும் சிக்கலில் உள்ளது.

ஒட்டன்சத்திரம் நகருக்கு ஏற்கனவே காவிரி ஆற்றில் இருந்து போதுமான குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

21-ந்தேதி பேரணி

ஒட்டன்சத்திரம் அருகே அறிவிக்கப்பட உள்ள சிப்காட்டிற்கும், 40-க்கும் மேற்பட்ட மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கும் தண்ணீரை விற்பதை உள்நோக்கமாகக் கொண்டு செயல்படும் இந்த திட்டத்தை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குடிநீர் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்த உள்ளார்கள். இந்தத் திட்டத்தை எதிர்த்து பல்ேவறு போராட்டங்கள் நடந்து உள்ளது. இந்தநிலையில் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்வதற்காகவும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் வருகிற 21-ந்தேதி (ஞாயிற்றுகிழமை) அன்று பி.ஏ.பி. விவசாயிகள் இணைந்து திருப்பூர்- பல்லடம் சாலையில் உள்ள வீரபாண்டி பிரிவிலிருந்து திட்டத்தை ரத்து செய்ய கோரி, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி, 20 ஆயிரம் விவசாயிகள் கலந்துகொள்ளும் வகையில் மாபெரும் கோரிக்கை பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் புதிதாக முடிவு செய்து உள்ளனர். பேரணியை சிறப்பாக நடக்க பி.ஏ.பி. ஆயக்கட்டு விவசாயிகள், பாசன சபை பொறுப்பாளர்கள், ஆர்வலர்கள், விவசாய சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

கூட்டத்தில், ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.