அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பணி இடைநீக்கம்

0
103

வேலைக்கு வராமல் பதிவேட்டில் கையெழுத்திட்ட கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பணியிடை நீக்கம் செய்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டு உள்ளார்.

இதயவியல் துறை தலைவர்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் இதயவியல் துறைத்தலைவராக பணியாற்றி வருபவர் டாக்டர்.முனுசாமி. இவர் அரசு ஆஸ்பத்திரிக்கு சரிவர வராமல் வருகைப்பதிவேட்டில் பணிக்கு வந்ததாக குறிப்பிட்டு வந்துள்ளதாக புகார் எழுந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குனரகத்துக்கு மருத்துவர்கள் சிலர் புகார் அளித்துள்ளனர்.

பணி இடை நீக்கம்

இந்தநிலையில், நேற்று முன்தினம் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து அரசு ஆஸ்பத்திரி முதல்வர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. அதில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறைச் செயலர் செந்தில்குமார் ஆகியோர் இந்த புகார் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இதயவியல் துறைத்தலைவர் முனுசாமியை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டு உள்ளார்.

டீன் விளக்கம்

இது குறித்து அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறும்போது, கோவை வந்த அமைச்சர், துறை செயலர் வருகைப் பதிவேட்டினை ஆய்வு செய்தனர். அதில், இதயவியல் துறைத்தலைவர் முனுசாமி முறைகேடு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான ஆணை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு இன்னும் வரவில்லை என்றார்.