படகு இல்லம் அமைக்கப்படுமா?

0
99

ஆனைமலையில் படகு இல்லம் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

படகு இல்லம்

பொள்ளாச்சி அருகே ஆனைமலை, ஒடையகுளம், வேட்டைக்காரன் புதூர் ஆகிய 3 பேரூராட்சிகள் உள்ளன. இங்கு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் இருந்து கழிவுநீர் ஆனைமலை பேரூராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள ஆறு உள்பட 6 இடங்களில் ஆற்றில் கலக்கிறது. கழிவுநீர் ஆற்றில் நேரடியாக கலந்து வருவதால் மாசடைந்து வருகின்றது.

மேலும் ஆழியாறு அணையில் இருந்து வரும் தண்ணீர் ஆற்றில் செல்கிறது. ஆற்றை ஆகாயத்தாமரைகள் முழுவதுமாக ஆக்கிரமித்து உள்ளன. இதனால் தண்ணீர் இருப்பதே தெரியாத அளவுக்கு காட்சி அளிக்கிறது. இதையடுத்து அப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஆனைமலையில் சுற்றுலா திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

சுற்றுலா மேம்படும்

இதைதொடர்ந்து ஆனைமலை ஆற்றில் படகு இல்லம் அமைப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம் மூலம் நீர்வளத்துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுவரை அதற்கான அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- ஆனைமலை தாலுகாவை சுற்றி மாசாணியம்மன் கோவில், பரம்பிக்குளம், டாப்சிலிப், ஆழியார் போன்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்கு உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். இருப்பினும் ஆனைமலையில் பொழுதுபோக்கு இடம் இல்லாததால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

இதைதொடர்ந்து ஆனைமலை ஆற்றங்கரை ஓரத்தில் படகு இல்லம் அமைக்க வேண்டும். அப்போது தான் சுற்றுலா தலமாக மேம்படும். மேலும் 10 லட்சம் லிட்டர் கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்கிறது. இதை தடுக்கவும், கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்காமல் இருக்கவும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். மேலும் படகு இல்லம் அமைத்தால், ஆற்றில் ஆகாயத்தாமரைகள் பரவுவது தடுக்கப்படும். நீர்நிலைகள் மாசுபடுவதும், கோழிக்கழிவு மற்றும் கழிவு பொருட்கள் கொட்டுவது தவிர்க்கப்படும். எனவே, படகு இல்லத்தை செயல்படுத்தினால், ஆறு பராமரிக்கப்படுவதோடு சுற்று வட்டார மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.