கோவில், டீக்கடைக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்

0
86

வால்பாறையில் கோவில், டீக்கடைக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன.

காட்டு யானைகள்

கேரள வனப்பகுதிகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் இறுதியில் காட்டு யானைகள் வால்பாறை வனப்பகுதிக்கு இடம் பெயா்வது வழக்கம். இதன்படி கேரள வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வரும் காட்டு யானைகள் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு வருகின்றன.

இவ்வாறு வரும் காட்டு யானைகள் சில நேரங்களில் குடியிருப்பு பகுதிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அட்டகாசம்

இந்த நிலையில் நல்லமுடி எஸ்டேட் பூஞ்சோலை பகுதியில் கடந்த 2 நாட்களுகாக 6 காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றன. இந்த யானைகள் நேற்று முன்தினம் இரவு நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சி முனை பகுதியில் இருக்கும் டீக்கடைக்குள் புகுந்து அங்கிருந்த குளிர்சாதனபெட்டி மற்றும் அங்கிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தின. இதுகுறித்து அறிந்த மானாம்பள்ளி வனச்சரக அதிகாரிகள் விரைந்து வந்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இதேபோல உபாசி பகுதியில் முகாமிட்டிருந்த 2 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தன. பின்னர் அங்கிருந்த மாரியம்மன் கோவிலின் கதவை உடைத்து கோவிலுக்குள் இருந்த பூஜை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வீசி எறிந்து அட்டகாசம் செய்தன. சத்தம்கேட்டு வந்த எஸ்டேட் தொழிலாளர்கள் சத்தம்போட்டு காட்டு யானைகளை விரட்டினர்.

வனத்துறையினர் அறிவுரை

தொடாந்து அந்த பகுதியில் வனத்துறயைினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் எஸ்டேட் பகுதி மக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுரை வழங்கி வருகின்றனர்.