மழைக்காலத்தில் நிரம்புவதற்கு சிறுவாணி அணை தயாராக இருந்தும், நிரம்பினால் கோவை மக்களின் மகிழ்ச்சியும் நிரம்பி வழியும் என்கிற நிலை இருந்தாலும்…அணையின் முழு கொள்ளளவு தண்ணீர் என்பது ஏமாற்றமாகவே உள்ளது. அணை நிரம்பி வழிய துடிக்குது… ஆனால் அதனை நிரம்ப விடாமல் தடுக்கும் நிலை இருக்குது என்பது அவலமாக உள்ளது.ஆகவே அணையில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கப்படுமா…சிக்கலுக்கு முழுமையான தீர்வு கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.
சிறுவாணி அணை
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயர கொள்ளளவு கொண்ட இந்த அணையில் குடிநீர் எடுக்கும் உரிமை தமிழகத்துக்கும், அணையை பராமரிக்கும் உரிமை கேரளாவுக்கும் உள்ளது. அணையின் ஒரு பகுதியில் உள்ள நீரேற்றும் பகுதியில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் எடுத்து கோவைக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த குடிநீர் மூலிகை கலந்து வருவதால் சுவை அதிகமாக இருக்கும். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை அணையில் 50 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. இதனால் ஒருமுறை அணை நிரம்பினாலும் அந்த ஆண்டு முழுவதும் கோவைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.
50 அடிக்கு தேக்குவது இல்லை
ஆனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழை காரணமாக கேரளாவில் பல இடங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது. இதனால் 4 ஆண்டாக அணையில் 50 அடிக்கு தண்ணீரை தேக்க கேரள அரசு அனுமதிப்பது இல்லை. 45 அடியை தாண்டிவிட்டாலே அணைக்கு வரும் தண்ணீரைவிட கூடுதல் அளவு தண்ணீர் ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.
இப்படிதான் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 45 அடியை தொட்டதுமே ஏராளமான தண்ணீர் அணையில் இருந்து ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக 4 ஆண்டுகளாக அதிகாரிகள் கூறிவருகிறார்கள். ஆனால் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு இதுவரை காணப்படவில்லை. மழை காலத்தில் சிறுவாணி அணை தயாராக இருந்தும், முழு கொள்ளளவு தண்ணீர் தேக்குவது என்பது கானல் நீராகவே உள்ளது. ஆகவே முழுக்கொள்ளளவு தண்ணீர் தேக்கப்படுமா…சிக்கலுக்கு முழுமையான தீர்வு கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
சாலை துண்டிப்பு
கோவையில் இருந்து சிறுவாணி அணைக்கு செல்ல 2 வழி உள்ளது. சாடிவயல் சோதனை சாவடி வழியாக சென்றால் அங்கிருந்து 16 கி.மீ. தூரம்தான். ஆனால் மற்றொரு வழியான ஆனைக்கட்டி பாதை வழியாக சென்றால் 40 கி.மீ. தூரத்துக்கும் மேல் ஆகும். அந்த வழியாக வனவிலங்குகளின் தொந்தரவும் அதிகம். எனவேதான் அதிகாரிகள் சிறுவாணி அணை செல்ல சாடிவயல் சாலையை பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலை துண்டிக்கப்பட்டது. அதன் பின்னர் சாலையை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இங்கிருந்து தமிழக சோதனை சாவடி வரை 10 கி.மீ. தூரத்துக்கு சாலை நல்ல நிலையில் இருக்கிறது. ஆனால் அங்கிருந்து அணைக்கு செல்லும் 6 கி.மீ. தூரம் கொண்ட சாலையில்தான் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. அதுவும் சிறிது தூரம்தான்.
3 ஆண்டாக கூட்டம் நடத்தவில்லை
இந்த சாலையை சீரமைத்துவிட்டால், அதிகாரிகள் விரைவாக அணைக்கு சென்று கண்காணிக்க முடியும். ஆனால் சாலையை சீரமைக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுபோன்று அணை பராமரிப்பு, குடிநீர் எடுப்பது தொடர்பாக தமிழக-கேரள அதிகாரிகள் ஆண்டுக்கு ஒருமுறை ஆலோசனை கூட்டம் நடத்துவது உண்டு. ஆனால் கடந்த 3 ஆண்டாக அதுபோன்ற கூட்டம் நடத்தப்படவே இல்லை.
ஆண்டுக்கு ஒருமுறை கூட்டத்தை கூட்டி விவாதித்தால் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது, அவ்வாறு பிரச்சினை ஏற்பட்டாலும் உடனடியாக பேசி தீர்வு கொள்ளலாம். எனவே அதை செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும். அத்துடன் இதில் உயர் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.