சூறாவளி காற்று; 450 வாழை மரங்கள் முறிந்தன

0
80

கூடலூரில் வீசிய சூறாவளி காற்றுக்கு 450 வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

வாழைகள் சரிந்து விழுந்தது

கூடலூர் பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதன் காரணமாக விவசாயம் உள்பட அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் படிப்படியாக மழை குறைந்து வெயில் அடித்து வந்தது. இதைதொடர்ந்து அன்றாட பணிகளை பொதுமக்கள் மேற்கொண்டு வருவதுடன், விவசாய பணிகள் மும்மூரமாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் கூடலூரில் மாலை நேரத்தில் சாரல் மழையும், சில சமயங்களில் கடும் பனிமூட்டமும் காணப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கூடலூர் பகுதியில் திடீரென சூறாவளி காற்று வீசியது. இதற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஸ்ரீமதுரை, முதுமலை ஊராட்சி பகுதியில் பயிரிட்டு இருந்த ஏராளமான வாழை மரங்கள் காற்றில் முறிந்து விழுந்தன. ஸ்ரீமதுரை ஊராட்சி கொரவயலில் 450-க்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்தன.

விவசாயிகள் கவலை

சில நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சேதம் அடைந்ததால், விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் கவலை அடைந்துள்ளனர். தகவல் அறிந்த தோட்டக்கலைத் துறையினர் சூறாவளி காற்றில் சேதமடைந்த வாழைகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது வாழைகள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக தோட்டக்கலைத்துறையினர் உறுதி அளித்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களாக தொடர் கனமழையால் பாகற்காய் உள்ளிட்ட கோடைகால பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டது. இருப்பினும் வாழை விவசாயம் கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூறாவளி காற்றால் வாழை மரங்கள் விழுந்து பாதிக்கப்பட்டு பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, இழப்பீடு தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.