தேர்வு மையங்களை அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ஆய்வு

0
137

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு 24-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள தேர்வு மையங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் காலி பணியிடங்களை நிரப்ப எழுத்துத்தேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன் தேர்வு எழுதுபவர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது.

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, கிணத்துக்கடவு தாலுகாவில் மொத்தம் 7260 பேர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை எழுதுகின்றனர். இதற்காக வருவாய் கோட்டத்தில் 23 தேர்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் தேர்வு மையங்களில் செய்யப்பட்டு ஏற்பாடுகள் குறித்து நேற்று தமிழ்நாடு அரசு தேர்வாணைய உறுப்பினர் ஆரோக்கியராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கண்காணிப்பு

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 23 மையங்களில் 7260 பேர் எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. தேர்வு கூட ஆய்வு அலுவலர்கள் காலை 7.30 மணிக்குள் தேர்வு மையங்களில் இருக்க வேண்டும்.

காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வு தொடங்குவதற்கு முன்பாக காலை 9 மணிக்கு நுழைவு வாயில் மூடப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் தேர்வு எழுதுவது வீடியோ பதிவு செய்யப்படும். தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்