பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் உள்ளிட்ட பிரச்சினைகள் நடைபெற்றால் தலைமை ஆசிரியர்கள் போலீசின் கவனத்துக்கு கொண்டு வந்தால் ஆரம்ப கட்டத்திலேயே நடவடிக்கை எடுக்க முடியும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கூறினார்.
400 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்பு
கோவை மாவட்டத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் பாலியல் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த “புரொஜக்ட் பள்ளிக்கூடம்” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று கோவை மாவட்டத்தில் உள்ள 350 பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உடல் கல்வி ஆசிரியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சூலூரில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 400 பேர் கலந்துகொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பத்ரிநாராயணன் பேசும்போது கூறியதாவது:-
விழிப்புணர்வு
இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் இதுவரை 35 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாலியல் தொடுதலில் தவறு எது? என்பதை – சுட்டி காண்பித்தால் அவர்களும் உஷாராகி விடுவார்கள்.
இதுதொடர்பான தொல்லைகளை பெற்றோர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் மாணவ-மாணவிகளுக்கு தைரியம் கொடுக்க வேண்டும்.
பெற்றோரும் தங்களது குழந்தைகளின் பிரச்சினைகளை புரிந்துகொண்டு தினமும் அவர்களுடன் பழகி அன்பை பரிமாற வேண்டும்.
போலீசுக்கு தெரிவிக்கலாம்
பள்ளிகளிலோ அல்லது பள்ளிகளுக்கு வரும்போதோ மாணவ-மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவுகள், சீண்டல்கள் இருந்தால் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆரம்பகட்டத்திலேயே போலீசுக்கு தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கைகளை எடுத்து மாணவ-மாணவிகளுக்கு உதவிபுரிய முடியும்.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு சிறந்த வழிகாட்டுதல்களை வழங்குவதுடன், அவர்களின் சங்கடங்களையும் புரிந்துகொள்ள வேண்டும். எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.