தோட்ட தொழிலாளர் அலுவலர்களுக்கான திறனாய்வு கூட்டத்தில், தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கூடுதல் தலைமை செயலாளர் முகமதுநசிமுதீன் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
மண்டல அளவிலான தோட்ட தொழிலாளர் அலுவலர்களுக்கு திறனாய்வு கூட்டம் கோவை டாக்டர் பாலசுந்தரம் ரோட்டில் உள்ள கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் அலுவலகத்தில் நடந்தது. இதில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் முகமது நசிமுதீன் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் 3 பேருக்கு ஓய்வூதிய ஆணை, இயற்கை மரணம் அடைந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் உதவித்தொகை, 3 பேருக்கு ரூ.7 ஆயிரம் வீதம் கல்வி உதவித்தொகை, அமைப்பு சாரா பயனாளிகள் 5 பேருக்கு அடையாள அட்டை ஆகியவை வழங்கப்பட்டது. இதை கூடுதல் தலைமை செயலாளர் முகமது நசிமுதீன் வழங்கினார்.
குறைந்தபட்ச கூலி
கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்தையும் குழந்தை தொழிலா ளர் இல்லாத மாவட்டமாக அறிவிக்க ஏதுவாக குழந்தை தொழி லாளர், வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்த்தி இருந்தால் அதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
தோட்ட நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்குவதை உறுதி செய்வது, பணிபாதுகாப்பு, வீடு மற்றும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வது, கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்துவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.
சட்டரீதியாக நடவடிக்கை
எடையளவு சட்டத்தின் கீழ் மறுமுத்திரையிடாத எடைகள் பயன்பாட்டில் உள்ளதா? என்று கண்டறிவது, ரேஷன் கடை, பெட்ரோல் பங்குகளில் அளவு குறைபாடு, பொட்டல பொருட்கள், குடிநீர் பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.
இதில் கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் டி.குமரன், தொழிலாளர் இணை ஆணையாளர்கள் லீலாவதி (கோவை), சசிகலா (ஈரோடு), ரமேஷ் (சேலம்) மற்றும் வால்பாறை, ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, ஏற்காடு பகுதியை சேர்ந்த தொழிலாளர் உதவி ஆணையாளர்கள் கலந்து கொண்டனர்.


















