நீர்மட்டம் 42 அடியை தாண்டியதால் சிறுவாணி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் தண்ணீரை திறக்கக்கூடாது என்று தமிழக அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். சிறுவாணி அணை
சிறுவாணி அணை
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அடர்ந்த வனப் பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து கோவைக்கு தினமும் 10 கோடியே 10 லட்சம் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் பலத்த மழை பெய்து சேதம் ஏற்பட்டதால் அணையில் முழு கொள்ளளவுக்கு தண்ணீர் தேங்குவது இல்லை. இதனால் சிறுவாணி அணையிலும் 50 அடி வரை தண்ணீரை தேக்க கேரள அரசு மறுத்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அதிகாரிகள், கேரள அதிகாரிகளிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு காணப்படவில்லை.
தண்ணீர் திறப்பு
இந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அதுபோல் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால், சிறுவாணி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. இதனால் 15 அடிக்கும் குறைவாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.
நேற்று முன்தினம் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 42 அடியை தாண்டியது. மேலும் அணைக்கு அதிகளவில் தண்ணீர் வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கேரள அதிகாரிகள், தமிழக அதிகாரிகளுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல் நேற்று முன்தினம் இரவில் திடீரென்று அணையின் மெயின் ஷட்டரை திறந்து தண்ணீரை வெளியேற்றினர்.
அடைக்க அறிவுறுத்தல்
இதனால் சிறுவாணி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. பின்னர் அந்த தண்ணீர் அகழி அருகே பவானி ஆற்றில் கலந்து பில்லூர் அணைக்கு வந்தது. முன்கூட்டியே தகவல் தெரிவிக் காமல் சிறுவாணி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதை அறிந்து தமிழக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள் கேரள அதிகாரிகளை தொடர்பு கொண்டு சிறுவாணி அணையில் திறக்கப்பட்ட தண்ணீரை அடைக்கும்படி அறிவுறுத்தினார்கள். ஆனால் இன்னும் தண்ணீர் அடைக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக கேரள அதிகாரிகள் இதுபோன்று செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கேரள அதிகாரிகளின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு
சிறுவாணி அணையில் திடீரென்று கசிவு ஏற்பட்டதால்தான் தண்ணீரை திறந்துவிட்டதாக கேரள அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் எவ்வித கசிவும் இல்லை. அணை உறுதியாக தான் இருக் கிறது. ஆனால் அணையில் குடிநீருக்கு தண்ணீர் எடுக்க கூடாது என்று தான் கேரள அதிகாரிகள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முதலில் 45 அடிக்கும் மேல் தண்ணீர் இருக்கும்போது திறந்தனர். தற்போது அணையில் 42 அடியை தாண்டினாலே தண்ணீரை திறந்து விடுகிறார்கள். அணையில் 50 அடிவரை தண்ணீரை தேக்கினால்தான் கோவைக்கு ஒரு ஆண்டுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. இது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரியிடம் பேசி நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
39.4 அடிக்கு தண்ணீர்
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 39.4 அடியாக உள்ளது. அணையில் இருந்து 10 கோடியே 10 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்காமல் அணையில் இருந்து தண்ணீரை திறக்கக்கூடாது என்று கேரள அதிகாரிகளிடம் வலியுறத்தி உள்ளோம். அத்துடன் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.
https://www.dailythanthi.com/News/State/release-of-water-from-siruvani-dam-748445