ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராக ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு சம்மன்

0
73

அ.தி.மு.க. பொதுக்குழு கடந்த 11-ஆம் தேதி, நடைபெற்ற நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் அருகே எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதனால்,பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை கைது செய்தனர்.

இதனிடையே,அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்ததாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி நடந்த கலவரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு ராயபேட்டை காவல்நிலைய போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நாளை ஓபிஸ் ஆதரவாளர்களும், நாளை மறுநாள் இபிஎஸ் ஆதரவளர்களும் ராயபேட்டை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வீடியோ ஆதாரங்களை அடிப்படையாக வைத்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.