பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

0
75

பில்லூர் அணையில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பில்லூர் அணை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் பில்லூர் அணை உள்ளது கடந்த சில நாட்களாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நேற்றுமுன்தினம் அதிகாலை பெய்த மழையால் அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் 100 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியது.

எனவே பாதுகாப்பு கருதி அணையின் 4 மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டது. மேலும் மின் உற்பத்திக்காக 2 எந்திரங்களை இயக்கி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு

நேற்று காலை 7 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 19 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது மேலும் மாலை 5 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது.

அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருபுறமும் கரைகளை தொட்டபடி தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது.

இந்த நிலையில் கோவை, நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு பணியை மேற்கொள்வதற்காக நீலகிரி மாவட்டம் செல்லும் வழியில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் மேட்டுப்பாளையம் வந்தனர். அவர்கள் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மக்களுக்கு உணவு

அதன் பின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவிட்டு உள்ளார். அதன் அடிப்படையில் ஆய்வுப்பணியை மேற்கொண்டோம்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய இடங்களை கண்ட றிந்து அந்த இடங்களில் மீண்டும் பாதிப்பு ஏற்படாத வகையில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முதல்- அமைச்சர் உத்தர விட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் மேட்டுப்பாளையம்- ஊட்டி ரோடு ஓடந்துறை பாலம் அருகில் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றி முகாமில் தங்க வைத்து உள்ளோம்

அங்கு அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. பில்லூர் அணையை தூர் வாருவது குறித்து தமிழக முதல்- அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.