மாநகரத்தில் பொதுப் போக்குவரத்து வசதி பத்தல, பத்தல! புதிய வழித்தடங்களை விரிவுபடுத்தணும்

0
49

அதிவேகத்தில் விரிவடையும் மாநகர பகுதியில், மக்களின் தேவைக்கு ஏற்ப பஸ்களும் இல்லை; புதிய வழித்தடங்களும் உருவாக்கப்படவில்லை. கோவை மாநகரம் வேகமாக வளர்ந்து வருகிறது. மாநகரின் எல்லைகள் வேகமாக விரிவடைந்து வருகின்றன. கடந்த 2011ல், 156 சதுர கி.மீ., ஆக இருந்த கோவை மாநகர எல்லைப்பகுதி, 254 சதுர கி.மீ., ஆக விரிவுபடுத்தப்பட்டது. கடந்த 11 ஆண்டுகளில் குடியிருப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மாநகரத்தின் வளர்ச்சிக்கேற்ப, பொதுப்போக்குவரத்து அதிகரிக்கப்படவில்லை. மெட்ரோ ரயில், மெமு, மின்சார ரயில் உள்ளிட்ட கட்டமைப்புகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.கோவை மாநகரில், 20 ஆண்டுகளுக்கு முன் வகுக்கப்பட்ட, வழித்தடங்களில் மட்டுமே, இன்றுவரை அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் இயக்கப்படுகின்றன. புதிய வழித்தடங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை. இதுகுறித்த ஆய்வில் போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டதாகவே தெரியவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள், பைக், கார் உள்ளிட்ட தனி நபர் போக்குவரத்தை பயன்படுத்துவதால், போக்குவரத்து நெரிசல் என்பது தீர்க்க முடியாத பிரச்னையாக உள்ளது.எதிர்கால போக்குவரத்தை கணக்கில் கொண்டே, பல்வேறு பகுதிகளிலும், பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. விமான நிலைய விரிவாக்க பணி நிறைவடைந்தால், தொழில் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்து வழித்தடங்களை அதிகரிக்க வேண்டியது அவசியம். மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து துறை, போக்குவரத்துக்கழகம் என அனைவரும் இணைந்து, புதிய வழித்தடங்களை கண்டறிந்து அவற்றுக்கான பஸ் போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே, மாநகர வளர்ச்சியில் அக்கறை கொண்டோரின் எதிர்பார்ப்பாகும்.