வேளாண் பல்கலைக்கழகத்தில் மாங்கன்று அடர்நடவு முறையை கவர்னர் பன்வாரிலால் புரோகித் பார்வையிட்டார்

0
129

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் வந்தார். அவரை, துணைவேந்தர் குமார், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் வரவேற்றனர். பல்கலைக்கழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவுக்கு வந்த கவர்னர் தோட்டக்கலைத்துறை கல்லூரி வளாகத்தில் மா மரக்கன்றுகள் நட்டு, அடர்நடவு முறையை தொடங்கி வைத்தார்.

அடர்நடவு முறை என்பது, மா மரங்களுக்கு இடைப்பட்ட இடைவெளி குறைக்கப்பட்டு, அதாவது வரிசைகளுக்கு இடையில் 4 மீட்டர் இடைவெளியும், மரங்களுக்கு இடையில் 2 மீட்டர் இடைவெளியும் இருக்குமாறு நடவு செய்யப்படுவதாகும். இதன்மூலம் ஒரு ஏக்கரில் 65 மரக்கன்றுகள் நட வேண்டிய இடத்தில் 500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு விளைச்சல் அதிகரிக்கப்படும்.
இந்தநிலையில் பல்கலைக்கழகத்திற்கு வந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித் அடர்நடவு முறையில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள மா மரக்கன்றுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மரக்கன்றுகளின் வளர்ச்சி குறித்்து கேட்டறிந்தார். அப்போது அவர், மராட்டிய மாநிலம் விதர்பா பகுதியில் அமைந்துள்ள தன் சொந்த கிராமத்தில் அடர்நடவு முறையில் மா மரக்கன்றுகள் நடவு செய்யும் முறையை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், எனவே அதற்கான தொழில்நுட்ப ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து அடர்நடவுமுறையினால் கிடைக்கும் விளைச்சல் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்படும் பலன் குறித்து கவர்னருக்கு துணைவேந்தர் விளக்கம் அளித்தார். அப்போது செயல்முறை விளக்க பகுதியில் நிறுவப்பட்டு உள்ள திரவ உரம் மற்றும் நீர் பாய்ச்ச கூடிய சொட்டு நீர் கருவிகளையும் பார்வையிட்டு, உரம் அளிக்கும் காலம், மா மரத்திற்கு நுண்நீர் பாசனம் மூலம் கொடுக்கப்பட வேண்டிய ஊட்டச்சத்து கலவைகளின் விகிதம் குறித்தும் கேட்டறிந்தார். இதையடுத்து கவர்னர் புறப்பட்டு சென்றார்.
இதன்பின்னர் துணைவேந்தர் குமார் கூறுகையில், கவர்னரின் சொந்த ஊரான விதர்பா வறண்ட பகுதியாகும். விவசாயத்துக்கு போதுமான தண்ணீர் அங்கு கிடைக்காது. அங்கு சொட்டு நீர்பாசனம் மட்டுமே செய்ய முடியும். இதனால் அந்த பகுதிக்கு இந்த அடர்நடவு முறை நல்ல பலனைத்தரும் என்றார்.