பொங்கல் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி மார்க்கெட்டில் கரும்பு, பூக்கள் விற்பனை மும்முரம்

0
123

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்பட பல்வேறு இடங்களில் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். இதன் காரணமாக பூக்கள், கரும்பு, மஞ்சள் கொத்து, பூளைப்பூ, ஆவாரம்பூ விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இதன்காரணமாக பொள்ளாச்சி காந்தி மார்க்கெட், தேர்நிலை மார்க்கெட், திரு.வி.க. மார்க்கெட் பகுதிகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் கூட்டத்தால் கடை வீதி, சத்திர வீதி களைகட்டியது.

வரத்து குறைவு காரணமாக பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. அதிகபட்சமாக மல்லிகை பூ கிலோவுக்கு ரூ.2 ஆயிரத்து 500 வரை விற்பனை ஆனது. மேலும் கரும்பு விலையும் உயர்ந்து காணப்பட்டது. ஒரு ஜோடி கரும்பு ரூ.60 முதல் ரூ.80 வரையும், மஞ்சள் கொத்து ரூ.30 முதல் ரூ.40 வரையும், பூளைப்பூ, ஆவாம்பூ ஒரு கட்டு ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல பொங்கல் பானை, கோலப்பொடி ஆகியவற்றையும் பெண்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

பூக்கள் விலை உயர்வு

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறியதாவது:- பொள்ளாச்சி பூ மார்க்கெட்டுக்கு திண்டுக்கல், ஒசூர், தேனி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகின்றன. இதுதவிர பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் கடும் பனிபொழிவு காரணமாக பூக்கள் வரத்து மிகவும் குறைந்து விட்டது. வழக்கமாக எப்போதுமே பொங்கலுக்கு பூக்கள் வரத்து குறைவாக இருக்கும். இந்த ஆண்டு வழக்கத்தை விட குறைவாக இருப்பதால் விலை மேலும் அதிகரித்து உள்ளது.

பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு 2 டன் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2000 முதல் ரூ.2,500 வரையும், காக்கடான் ரூ.600 முதல் ரூ.800 வரையும், அரளி ரூ.200 முதல் ரூ.250 வரையும், செவ்வந்தி ரூ.100, செண்டுமல்லி ரூ.50 முதல் ரூ.60 வரையும், கோழிக்கொண்டை ரூ.60 முதல் ரூ.80 வரையும், ரோஜா பூ ஒரு கட்டு ரூ.160 முதல் ரூ.200 வரையும், முல்லை ரூ.1200 முதல் ரூ.1500, ஜாதிப்பூ ரூ.1300 முதல் ரூ.1600 வரையும் விற்பனை ஆனது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பஸ், ரெயிலில் கூட்டம்

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு பொதுமக்கள் செல்ல வசதியாக பொள்ளாச்சியில் இருந்து கோவை, திருச்சி, வால்பாறை, மதுரை, பழனி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் பயணிகள் கூட்டம் அதிகளவு இருந்ததால் பஸ்சில் இடம் பிடிக்க முண்டியடித்து கொண்டு ஏறினர்.

குறிப்பாக வால்பாறை, பழனி செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. இதற்கிடையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இதன் காரணமாக பொள்ளாச்சியில் இருந்து மதுரை செல்லும் ரெயில்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் நீண்ட வரிசையில் நின்று பயணிகள் டிக்கெட் எடுத்தனர். இதையொட்டி பொள்ளாச்சி ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.