தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் மாவட்ட பகுப்பாய்வு அறிக்கை மற்றும் திட்டம் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், மாநில வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் செல்வராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் கலெக்டர் ராஜாமணி பேசியதாவது:-
தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் தொடங்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் வறுமை ஒழிப்பு என்றும் செயல்பாட்டையும் தாண்டி தொழில் மேம்பாடு, நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் ஊரக பகுதிகளின் சமுதாயத்தில் வளம் மற்றும் நிலைத்த உயர்வினை உருவாக்கி பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இத்திட்டத்தில் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
2 கட்டங்களாக செயல்படுத்தப்படும்
இத்திட்டமானது தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் 120 வட்டாரங்களில், 3,994 கிராம பஞ்சாயத்துகளில் 2 கட்டங்களாக 6 ஆண்டுகள் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கான மதிப்பீடு நிதி ரூ.918.20கோடி ஆகும். இந்த திட்டத்திற்கு உலக வங்கி உதவியாக ரூ.642.74 கோடி மற்றும் தமிழக அரசு பங்களிப்பு ரூ.275.46 கோடி ஆகும்.
கோவை மாவட்டத்தில் காரமடை, பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ். குளம் மற்றும் அன்னூர் ஆகிய வட்டாரங்களில் 54 கிராம பஞ்சாயத்துக்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த புதிய திட்டத்தின் மூலம் ஊரக பகுதிகளில் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதுடன் அவர்களது பொருளாதாரம் மேம்பட மாவட்ட அளவிலும் மற்றும் வட்டார அளவிலும் அனைத்து துறையை சார்ந்த அலுவலர்கள் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.