குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: த.மு.மு.க. வினர் ஆர்ப்பாட்டம்

0
116

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து த.மு.மு.க. சார்பில், மதசார்பின்மை காக்கும் மக்கள் ஒற்றுமை ஆர்ப்பாட்டம் கோவை கரும்புக்கடை சிக்னல் பகுதியில் நேற்று நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட தலைவர் அகமது கபீர் தலைமை தாங்கினார். செயலாளர் முஜிபுர் ரகுமான் வரவேற்று பேசினார். இதில், த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடு கணக்கெடுப்பு ஆகியவை முஸ்லிம்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும். எனவே இதை தமிழ்நாட்டில் அமல்படுத்தக்கூடாது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தி உள்ளோம்.
நாடு முழுவதும் மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இதையும் மீறி இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் த.மு.மு.க.வின் போராட்டம் மேலும் வீரியத்துடன் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த போராட்டத்தில் கோவையில் உள்ள பல்வேறு ஜமாத்துகளை சேர்ந்த திரளானவர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷமிட்டனர்.
இதில், கோவை நாடாளுமன்ற தொகுதி பி.ஆர்.நடராஜன் எம்.பி., இ.உம்மர், சாதிக் அலி, ஷர்புதீன், சிராஜ்தீன், முகமது இஷாக், டி.ஏ.நாசர், எச்.உம்மர் பாரூக், ஆசிக் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டதால் ஆத்துப்பாலம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாற்று வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. போராட்டத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.
குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி கோவை பெரியநாயக்கன்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பெரியநாயக்கன்பாளையம் சுன்னத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு செயலாளர் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். பொருளாளர் முகமது இப்ராஹீம் முன்னிலை வகித்தார். இதில் கலந்துகொண்ட முஸ்லிம்கள், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று கையில் பதாகைகளை ஏந்தியவாறு கோ‌‌ஷமிட்டனர்.