நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

0
96

கோவை ஆர்.எஸ்.புரம், லைட் ஹவுஸ் பகுதியில் கூட்டுறவு பண்டக சாலையில் உள்ள ரேஷன் கடையில் ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கி பேசினார். அதைத் தொடர்ந்து லாலி ரோடு, சண்முகராஜபுரம், செல்வபுரம் ரங்கசாமி காலனி உள்பட பல்வேறு பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-
பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி 20 கிராம், திராட்சை 20 கிராம், ஏலக்காய் 5 கிராம், மற்றும் 2 அடி நீள கரும்புத்துண்டு ஆகியவற்றுடன் ரொக்கமாக ரூ.1000 வழங்கிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில், பொது வினியோகத் திட்டத்தின் கீழ் 1,418 ரேஷன் கடைகளில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 9,70,689 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.14.29 கோடி மதிப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பும், தலா ரூ.1000 வீதம் ரொக்கமாக ரூ.97.06 கோடியும், இலவச வேட்டி- சேலைகளும் என மொத்தம் ரூ.129.96 கோடி மதிப்பில் வழங்கப்படுகிறது.
இவற்றை 12-ந் தேதி வரை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். விடுபட்டவர்கள் 13-ந் தேதி பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி வாங்குவதற்கு ஏதுவாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரைமுருகன், மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்ன ராமசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பழனிசாமி, கோட்ட வருவாய் அதிகாரி தனலிங்கம், மற்றும் மணிமேகலை, பி.கே.சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி,மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும். கோவை மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை கடந்த தேர்தலை போல் மீண்டும் நிரூபிப்போம் .
இவ்வாறு அவர் கூறினார்.