யங்கூன்: அண்டை நாடான மியான்மரில், அரசாங்க ரகசியங்களை திருடியதாக கைது செய்யப்பட்ட,’ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனத்தின் இரண்டு நிருபர்களுக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் கடந்தாண்டு, ரோஹிங்கியா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதாக, உலகம் முழுவதும் பரபரப்பான செய்திகள் வெளியாகின.இது குறித்து செய்தி சேகரிப்பதற்காக, ஐரோப்பிய நாடான, பிரிட்டனின், ‘ராய்ட்டர்ஸ்’ என்ற, சர்வதேச செய்தி நிறுவனத்தை சேர்ந்த, வா லோன், 32, கியாவ் சோய் ஓ, 28, என்ற இரண்டு நிருபர்கள், மியான்மர் வந்தனர். அரசாங்க ரகசிய சட்டத்தை மீறி, ரகசியமான தகவல்களை திருடியதாக கூறி, அவர்களை, மியான்மர் போலீசார் கைது செய்து, யங்கூனில் உள்ள சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த, யங்கூன் நீதிமன்ற நீதிபதி, ஏ லின், நேற்று பிறப்பித்த உத்தரவு: இரண்டு நிருபர்களும், நாட்டின் கொள்கைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். நாட்டின் அதிகாரபூர்வ ரகசியங்கள் சட்டத்தை மீறியுள்ளனர். இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் தலா, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்த நிருபர்கள் இருவரும், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, மேல் முறையீடு செய்யப் போவதாக கூறியுள்ளனர்.நீதிமன்ற உத்தரவு, மியான்மர் நாட்டுக்கு மோசமான தினம் என்றும், பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது என்றும், ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.